பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

197

எரிந்து சாம்பலானவன் போல், கவிழ்ந்த தலையில் தும்பும் துரும்புமாய், பஞ்சுகளுமாய் இருந்த தலைமுடி சாட்சியம் கூறியது. அவன் கைகளைப் பிசைந்து, கால் பாதங்களைத் தேய்த்தபடி அவளை அரைக் கண்ணால் பார்த்த போது, தமிழரசி அவனை நோக்கி நடந்தாள். அவள் நெருங்க நெருங்க அவன், மனநெடி தாங்க முடியாமல் குப்புறச் சாயப்போனான். தன்னை நிலைப்படுத்திக் கொள்ள உடம்பை பின்னால் இழுத்ததால் பின்னால் விழப்போனான். வினை தீர்த்தானை வெறுத்தும், வெகுண்டும், சிலிர்த்தும், சினந்தும் பல்வேறு பார்வைகளால் பாய்ந்த தமிழரசி, இறுதியில் அரை நிமிடம் செலவழித்து உதடுகளைப் பிரித்து “நீ மனிதன் தானாப்பா?” என்றாள், ஒரு வினாடிக்குள்.

வினை தீர்த்தான் பதிலேதும் சொல்லாமல் தலை குனிந்தான். பெருவிரலால் தரையில் வட்டம் போட்டான். தமிழரசி கேள்வியை தொடர்ந்தாள்.

“ஊர்ல எத்தனையோ பேரை இப்படிக் கேட்ட ஒன்னைப் பார்த்துத் தான் இந்தக் கேள்வியை கேட்கிறேன். ஒன்னோட பெரியப்பா மகள் என்கிற உரிமையிலயோ, கடமையிலயோ கேட்கல. ஒன்னால நாசமாய்ப் போன ஒரு பெண் என்கிற நிலைமையில் கேட்கிறேன். சொல்லு. ஒருவேளை ஒரு காலத்துல மனிதனாய் இருந்து, அப்புறம் மிருகமாய் போனதால, ஒனக்கு பேச்சும் போயிட்டா? நீ மிருகமில்லன்னா, எனக்குப் பதில் சொல்லு. நீ மனுஷன் தானா?”

வினை தீர்த்தான் அவளை அதிர்ச்சியோடு பார்த்தான் நாசமாய் போயிட்டதாய் சொல்றாளே; எதையோ கேட்கப் போனவன், கண்களை மூடியபடியே கைகள் இரண்டையும் கோர்த்து, அவற்றைப் பிடரிக்குப் பின்புறமாய் கொண்டு போய் அதில் தலையைச் சாய்த்தான். ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தான். தமிழரசி கேட்க வேண்டியதை, கேட்கத் தகாதபடி கேட்டாள்.