பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20௦

நெருப்புத் தடயங்கள்



தானைப் பார்த்துப் பயந்தவள்போல், தமிழரசியின் கையைப்பிடித்துக் கொண்டாள்.

‘ என்னடி இது? ஒன் ஒருத்திக்காக நாற்பது பேர் காத்து இருக்காங்க. எதைத் திருடுனாலும் நேரத்தைத் திருடப்படாது. எதை சமமாய் பங்கிட முடியாட்டாலும் நேரத்தையாவது சமமாய் பங்கிடணுமுன்னு மேடையின் முன்னால அறுக்கிற பேச்சாளரை இடிச்சுப் பேசுற நீயா இப்படி?’ என்றாள்.

தமிழரசி, சிறிது பரபரப்பாகி பத்... இதுதான் வினை தீர்த்தான்...’ என்றாள்.

பத்மா, வினைதீர்த்தானை இழிவாகப் பார்த்தாள். ஐ ஸீ...’ என்று சொல்லியபடியே, அவனை நகர்ந்து நகர்ந்து பார்த்தாள். பிறகு “ஏய்யா பெரிய மனுஷா, ஒனக்கு நீ குழி வெட்டிக்கோ, வேண்டாங்கல. பட், அடுத்தவங்களுக்கு ஏய்யா வெட்டுற? ஒன்னால இவள் பட்ட... வாயை மூடாதடி இந்த மாதிரி தராதரம்...’

பத்மாவால் மேலும் பேச முடியவில்லை. தமிழரசி அவள் வாயை, பிரஷ்ஷர் குக்கர் மாதிரி கெட்டியாக மூடிக் கொண்டாள். பிறகு கையை எடுத்து பத்மாவின் அன்பில் கட்டுண்டு, அவளை அப்படியே அணைத்துக் கொண்டாள். கழுத்தில் ஆரம் போல் விழுந்த நீர், தன் கழுத்தில் பட, நிமிர்ந்த பத்மா, தமிழரசியின் கண்களைத் துடைத்தாள். இதற்குள் பஸ்சில் இருந்த பெண்கள் தமிழரசியைப் பார்க்க நாலாபக்கமும் சிதறி ஓடி, அவர்களும் அங்கே வந்து கூடிவிட்டார்கள். சில பெண்கள், திரைப்படங்கள் பலவற்றில் வரும் பிளாக் மெயில் வில்லனாக வினைதீர்த்தானை கற்பித்து, அந்த முரடனிடம் தமிழரசி எப்படியோ ஒரு வகையில் மாட்டிக் கொண்டிருக்கலாம் என்றும் பாவித்துக் கொண்டார்கள். தமிழரசி, பொதுப்படையாகப் பேசினாள்.