பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

நெருப்புத் தடயங்கள்



தோன்றும் இந்தக் கரையைத் தொலைவில் பார்த்து, ஏதோ அணைக்கட்டு என்று நினைத்தாள். கரைக்கு வந்த பிறகு தான், முன் பக்கமும், பக்க பக்கங்களும் மொட்டையாய்கட்டாந்தரையாய் போன ஏரி என்று புரிந்தாள். வாழ்க்கை என்பதும் இந்த ஏரிக்கரை மாதிரி தானே? எதிர்பார்ப்பின் வெளிமுனை இந்த ஏரிக்கரையென்றால், அதன் உள்முனைதான் அனுபவம் என்ற கொதிதரையோ? இன்பம் என்பது, அனுபவிக்காதவனுக்கு நீர்த்தேக்கம் மாதிரி. அனுபவித்தவனுக்கு அதன் கரை மாதிரியோ? இந்த உதாரணம் கூட சரியல்ல. என் காதலை மட்டுமே இதனோடு ஒப்பிடலாம்!

இருவரும் மறுமையின் ஞானபீடம் போல் தோன்றிய ஒரு ஆலய மடத்தைத் தாண்டி, இம்மையின் ஞான வாசஸ்தலமான ஒரு சாராயக் கடையைக் கடந்து, ஊரின் வால் பகுதிக்கு வந்தார்கள். சந்து பொந்துகளால் சலனப் பட்ட தெருவில் நடந்து, குடிசைப் பகுதிக்குள் வந்தார்கள். ஆங்காங்கே மக்கள், அந்தக காலத்து மணிப்பிரவாள தமிழ் நடைபோல், தெலுங்கையும், தமிழையும் கலந்து, குதப்பிப் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழரசி, ஊரில் நடந்தவற்றை வினைதீர்த்தானிடம் சொல்லலாமா வேண்டாமா என்று வழி நெடுக சிந்தித்தபடியே நடந்தாள்.

குடிசைகளிலேயே படு குடிசை ஒன்றில், அடுப்புக்குள் கண்ணிர் புகை விட்ட நெருப்பை ஊதிக் கொண்டிருந்த பொன்மணி, காலடிச் சத்தம் கேட்டுக் கண்களைத் துடைத்தபடி எழுந்தாள். தமிழரசியின் கண்கள், அவளை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கும்போதே, “அண்ணியா? அடிடா சக்கே!’ என்று சொன்னபடியே, தமிழரசியைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். அவள் தோளில், தலையைச் சாய்த்துக் கொண்டாள்.

பிறகு அவளிடமிருந்து மெல்ல விலகி, “ஏன் குத்துக்கல் மாதிரி நிக்கீங்க? நாற்காலியை எடும்’ என்று வினை