பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

2௦5



எப்படில்லாம் என்கிட்ட நடக்கணுமுன்னு நினைச்சேனோ, அதையே நடந்ததாய் பாட்டிகிட்டே ரசிச்சு சொன்னேன். அவள் அதையே திருப்பிச் சொன்னாள். அவ்வளவு தான். சரி, நடக்காத கதையை விட்டுட்டு, நடந்த கதைக்கு வருவோம். ஒங்க அண்ணன் முடியாதுன்னார். உடனே இடுப்புல இருந்த ஒரு விஷப் பாட்டலைக் காட்டி, நான் அதோட போயிடுவேன். என்னை நீரு ஏமாத்துன பாவம், ஒம்மைப் பிடிக்காட்டாலும், ஒம்ம தங்கச்சி கலாவதியையும் தமிழரசியையும் பிடிச்சே தீருமுன்னு சொன்னேன். இப்படிச் சொல்லி வாய மூடு முன்னாலயே, சட்டுன்னு என்னை அடிச்சுட்டார். அடிக்கிற கை என்ன செய்யும்? அதைத்தான் அவரும் செய்தார். மொத்தத்துல அவரு என்னை கூட்டிக்கிட்டு வந்தார்னு சொல்றதை விட, அவரை நான் கூட்டிகிட்டு வந்துட்டேன்னு சொல்லலாம்.’’

அப்போது மசால் தோசையோடு வந்த வினைதீர்த்தான், ‘இவள் பிடிச்சால் பிடிதான். ஒரு தடவை முத்துலிங்கம் மச்சானும், அவரு சம்சாரமும் திட்டு னாங்கன்னு, என்கிட்ட தோட்டத்துல தூக்குப் போட்டுச் சாகப் போறதாய் சொன்னாள். நான் பெரிசா எடுத்துக்கல. தற்செயலாய் தோட்டத்துக்குப் போனால், குத்துக்காலு சட்டத்துல வால் கயிற்றை கட்டிக்கிட்டு இருக்காள். அப்போ கோபத்துல அடிச்சேன் பாரு அடி, நான் இவள் கூட வராட்டால் நிச்சயம் செத்துத் தொலைஞ்சிருப்பாள். அதனால்தான் நானும்...”

தமிழரசி சிறிது நேரம் மவுணித்தாள். வினைதீர்த் தானும் பொன்மணியும், அவள் முகத்தையே பார்த்தார்கள். பிறகு ‘நல்லதோ, கெட்டதோ, நம்பிக்கைத் துரோகமோ, நயவஞ்சகமோ, நடந்தது நடந்து போச்சு. நான் யார் ஒங்களைக் கேட்கதுக்கு?’ என்றாள்.

“தமிழு, நான் யோக்கியன்னு வாதாட வர்ல. என்னை உன் காலுல கிடக்குறதை கழட்டி வேணுமுன்னாலும் அடி.