பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

215



ரைட்டர் சபாஸ்டின் வெளியே ஒடியதும், தாமோதரனும் தனது அறைக்குள் வந்தான். எந்தத் தாக்குதலுக்கும் இலக்காகாத தூரத்திற்குப் போய்விட்டவன் போல் வந்தான். இந்த பொன்னுச்சாமி அதிகார நடனம் ஆடுவது அவனுக்கு லேசாய் புரிந்தது. என்ன செய்ய? பொன்னுச்சாமி இல்லையானால் பூமிநாதன் வந்திருக்க மாட்டார். பூமிநாதன் வராவிட்டால், அண்ணன் போக வேண்டிய இடத்திற்குப் போயிருப்பான். நல்லவர்களுக்கு, கெட்டவர்களே பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய காலம் இது. ஒரு நேர்மைவானின் தர்மத்தை, அதர்மவான்களே விசாரிக்க வேண்டிய காலம் இது. கலாவதி, என்னை மன்னிச்சுடும்மா! ஒனக்கு போடப்பட்ட சூடு ஒன்னோட மட்டும் முடியலம்மா, அது என்னையும் சுட்டு, இந்த போலீஸ் நிலையத்தையும் சுடுதம்மா. என் காதலையும் எரிச்சுட்டும்மா. ஒன் அப்பாவையும், ஒன்னையும் நாங்க அடிக்க வச்சபோது, தமிழரசி மேலதிகாரியிடம் போகப் போனபோது தாமுத்தான் என்னால கஷ்டப்படப்படாதுன்னு சொன்னியே... அதை நான் மறக்கலாமா? மறக்க லம்மா!’

நெற்றி நெளிய, விழி பிதுங்க, தானாய் புலம்பிக் கொண்டிருந்த தாமோதரன், சார்’ என்ற சத்தம் கேட்டு, வாயை மூடி, கண்களைத் திறந்தான். நான்கைந்து எஸ்டேட் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள். ஏற்கனவே ஒரளவு அறிமுகமானவர்கள்தான் - ஆனால் இப்போது அவர்கள் சரியாகத் தெரியவில்லை.

‘நீங்க யாருங்க?”

“மார்த்தாண்டன் கொலையை மறந்தது மாதிரி... எங்களையும் மறந்துட்டிங்க சார்.’

‘ஒ, நீங்களா? உட்காருங்க.”

‘நாங்க உட்கார வர்ல. நீங்க எங்களை உட்காரவச்சு, அநியாயம் வழங்குறதை விட நிற்க வச்சே நியாயம் வழங்கினால், அதுவே போதும். பூமிநாதன் எஸ்டேட்ல,