பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

நெருப்புத் தடயங்கள்

முகப்புத் திலகம் போல் வந்த அந்த பெண்ணைப் பார்த்தான். அவள் யாராய் இருக்கும் என்று அனுமானித்துக் கொண்டான். விழுந்த தலை போன்ற கவிழ்ந்த முகம்; வெட்டுண்டு துடிப்பது போன்ற கால் கைகள்: பூவரசம் பூ நிறம். பொங்கிய கண்ணீரை புறங் கையால் துடைக்கும் கோலம். அவளைப் பார்க்கப் பார்க்க தாமோதரனுக்குள், ஒரு புதிய உருவம் உருவாகிக் கொண்டிருந்தது.

திடீரென்று, அந்தப் பெண், போலீஸாருக்கு முதுகைக் காட்டி, கொந்தளித்த கூட்டத்திடம் முகத்தைக் காட்டி “எனக்காக நீங்க ரத்தம் சிந்தப் படாது. செத்தவர் வரப் போறதில்ல. பூமிநாதனுக்கும், அவனுக்கு உடந்தையாய் இருந்த அத்தனை பேருக்கும் ஆண்டவன் கூலி கொடுப்பான். நீங்கள் ஓடுங்க. போலீஸ்காரன் சுடு முன்னால போயிடுங்க,” என்று கத்தினாள்.

பிறகு, மீண்டும் உடம்பைத் திருப்பி, போலீலை நோக்கி, பத்தடி வேகமாக நடந்து,“போலீஸ் துரைமாரே, பிரிஞ்ச குடும்பத்தையும் நீங்க சேர்த்து வைக்கிறதாய் பேப்பர்ல படிச்சேன். அது உண்மைன்னால், என்னையும் என் புருஷனோட சேர்த்து வைங்க. என்னையும் அவர் போன இடத்துக்கு அனுப்பி வையுங்க. உம், சுடுங்கடா! என்னை கடுங்கடா! சுட்டுத் தொலைங்கடா!” என்று ஒப்பாரியிட்டாள்.

தாமோதரன், அவளைப் பார்த்தபடியே நின்றான். அவளுள் நியாயம் கேட்ட தமிழரசியையும், சூடுபட்ட கலாவதியையும் பார்த்தான். ஏற்கனவே இதயத்தைக் கனக்க வைத்த குற்றச் சுமை, கொடூரச் சுமையானது. அதை இறக்கி வைக்க இடந்தேடிப் பார்த்தான். ஐந்து நிமிடம் வரை, ஆடாது, அசையாது நின்றான். இறுதியில், இடங்கண்ட உறுதியில், தான் செய்ய வேண்டியதை இனங் கண்ட பெருமிதத்தில், போலீஸ்காரர்களைப் பார்த்து,