பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

227

நின்றபடி, அதன் மேல் தன் தலையை மோதிக் கொண்டாள். நான்கைந்து பெண்கள் போய், அவளைப் பிடித்துக் கொண்டு, அவளோடு சேர்ந்து அழுதார்கள்.

தாமோதரனுக்கு, துக்கம் தொண்டையையும், வெட்கம் கண்களையும் அடைத்தன. ரைட்டரைப் பார்த்து “இந்த அம்மாவோட ஸ்டேட்மெண்டையும், சம்பந்தப் பட்டவங்களோட ஸ்டேட்மெண்டையும் எழுதிட்டுவாங்க. இந்த அம்மாவை தொந்தரவு செய்யாண்டாம். அவங்களால எப்போ பேச முடியுமோ அப்போ பேசட்டும்” என்று ஆணையிட்டான்.

பிறகு கூட்டத்தைப் பார்த்து “நான் யோக்கியன்னு ஓங்ககிட்ட வாதாடல. ஒருவனுக்கு நேர்மை என்கிந்து கற்பு மாதிரி. அது ஒரு தடவை போனாலும், பல தடவை போனாலும் ஒண்ணுதான். என்னோட தர்மம், தானாய் கற்பிழக்கல - கற்பழிக்கப்பட்டது. ஒங்களுக்கு என்னால நியாயம் வழங்க முடியாட்டாலும், அநியாயம் வழங்க மாட்டேன். போகப்போகப் புரியும். ரைட்டர், குயிக்!” என்று சொல்லிவிட்டு, கண்களைப் புறங்கையால் துடைத்தபடி, காவல் நிலையத்திற்குள் வந்தான்.

டெலிபோனும், கையுமாக இருந்த ஏட்டு பொன்னுச்சாமி, அவனை கண் சிவக்கப் பார்த்தார். அவர் அங்கே இருப்பதை அங்கீகரிக்காதவன்போல், தாமோதரன், தன் இருக்கைக்கு வந்தான். உலகத்துப் பாவங்கள் அனைத்தும் ஒன்று திரண்டு, ஒரு முனைப்பாகி, தலையைக் குத்திக் குடைவது போலிருந்தது. இதற்குள் ஏட்டுப் பொன்னுச்சாமி அங்கே வந்து, சலூட் அடிக்காமலே படபடப்பாய் பேசினார்.

“சார், பூமிநாதன் முதலாளி ஒங்களோட பேசணுமாம். லைன்ல இருக்கார்.”

“யார், அக்கூஸ்டா?”

“பூமிநாதன் முதலாளி சார்!”