பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

231


இரண்டறக் கலக்கும் தொலைவிற்கு, நெருங்கிவிட்டான் தாமோதரன்.

சூரியன், இளஞ்சூட்டிலிருந்து, தலையை இளக வைக்கும் தூரத்திற்குப் போய்விட்ட நேரம். தலைமுடி, மனம்போல் சிதறிக் கிடக்க, கால்கள் பதறிப் பதறி நடந்து கொண்டிருந்தான். நாகர்கோவிலில் இருந்து, உறவுச் சத்தம் கேட்கமுடியாத, ரத்தத் தொடர்புகள் அறுபட்டுப் போகும் தொலைவிற்குப் போகத்தான் நினைத்தான். ஆனாலும், பாசம் அவனைப் பார்த்து விட்டது.

பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அறைக்குத் திரும்பியவன், அண்ணன், அவசர அவசரமாய் எழுதியிருந்த கடிதத்தைப் படித்தான். விஜயாவுக்கும், தமிழரசியின் அண்ணன் ராஜதுரைக்கும், அவசரக் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது என்றும், நாளை மறுநாளே கல்யாணம் என்றும், உடனடியாக, கையில் முடியுமானால் கொஞ்சம் பணத்தோடு வரவேண்டும் என்றும் முத்துலிங்கம் தெரிவித்திருந்தார். விரைவில் அவனுக்கும், தமிழரசிக்கும் ஏற்பாடு செய்துவிடப் போவதாகவும் வாக்களித்திருந்தார்.

அவனுக்கு மனசு கேட்கவில்லை. வாங்கிப் போட்டிருந்த கட்டிலையும், இதரப் பொருட்களையும், ஆற அமர அனுப்பி வைக்கும்படி ரைட்டரிடம் கூறிவிட்டு, ஆறாமல், அமராமல் கையில் ஒரு சூட்கேஸோடு, அவன் புறப்பட்டு விட்டான். ஏட்டு பொன்னுச்சாமி தவிர, அத்தனை போலீஸ்காரர்களும், மற்றும் பல நண்பர்களும், அவனை கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தார்கள்.

தாமோதரன், நடையை வேகப்படுத்தினான். கல்யாண நேரம் கழிந்து விட்டதோ என்னமோ... விஜயாவுக்கு, நானென்றால் உயிர்... 'ஷ

கல்யாண நாயகியான விஜயாவை, மணக்கோலத்தில் பார்க்க வேண்டும் என்ற பந்தத்தில் அவன் பந்து போல் எம்பி நடந்தான். திடீரென்று, வேலியோர கற்றாழை