பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

235


இருக்கிற ஒனக்கு சீட்டு விளையாட்டே பொழைப்பாய் போயிட்டு. ஒன்னை மாதிரி ஆம்புளைங்க சரியாய் இருந்தால், இந்த பைத்தியக்காரி முத்துமாரி எதுக்குப் புலம்பணும்?"

"நீ புலம்புனால், அது ஒன்னோடதான் முடியும், நான் புலம்புனால், என் பெண்டாட்டி பிள்ளைகுட்டி வரைக்கும் போகுமே, ஊமை கண்ட கனவு மாதிரி, போ சித்தி. டேய் மண்டையா, துருப்புச் சீட்டு ஆட்டியன் ரெண்டா, கிளாவர் ரெண்டா?"

கில்லாடியார் பேச்சை முடித்ததும், ஓரளவு தைரியமான ஒரு இளைஞன், இன்னும் அங்கேயே நின்று கொண்டிருந்த தாமோதரனை நோட்டம் விட்டபடியே "கவலப்படாத பாட்டி, நமக்கும் காலம் வரும்" என்றான்.

முத்துமாரி, பயங்கரமாய் கத்தினாள்.

"நீங்கெல்லாம் எதுக்குடா இந்த உடம்பை வச்சிக்கிட்டு இருக்கணும்? அறுத்துப் போட்டாலும் அறுபது கிலோ தேறும். கடவுளே.... கடவுளே... இந்தப் பங்காளிப் பயலுவ சும்மா இருக்கது மாதிரி, என்னால் இருக்க முடியலியே. போலீஸ்காரன் அடிச்ச அடியில பழையபடியும் பைத்தியமாய் போனவள் அப்படியே இருந்துருக்கப் படாதா? நடம்மா கலா, ஒன்னத்தான் வா.. கூழோ, கஞ்சோ காய்ச்தித் தாரேன்."

முத்துமாரிப் பாட்டி, கீழே விழப்போன கலாவதியை, கைத்தாங்கலாய்ப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தாள். தாமோதரனால், அவர்கள் பின்னால் நடக்க முடியவில்லை.. அசட்டை செய்வது போல் பாவித்த ஊரார் முன்னால் நிற்கவும் முடியவில்லை. கால்களைத் தேய்த்தபடி ஆள் அரவம் இல்லாத ஒரு தெரு வழியாய் நடையை மாற்றினான். கையில் இருந்த சூட்கேஸ், கீழே விழுந்தது தெரியாமல் நடந்தான். யாரோ ஒரு பையன், அதை எடுத்துக் கொடுத்தான்.