பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

237


ஆட்டிக் கொண்டிருந்தபோது, உள்ளறையில், கழுத்தில், மாலைகளோடு, உணவருந்திக் கொண்டிருந்த விஜயாவும், ராஜதுரையும் அவசரமாய் சாப்பாட்டை முடித்து விட்டு அவனருகே வந்தார்கள். விஜயா, தாமுவின் காலில் விழுந்தாள். ராஜதுரை, அவன் முட்டிகளைத் தொட்டு வணங்கினான். தங்கையை, தத்தளிக்கப் பார்த்தவனைப் பார்த்து "தாம்பாளத்தில் இருக்கிற விபூதியை எடுத்து அவங்க ரெண்டுபேருக்கும் பூசுப்பா" என்றார் முத்துலிங்கம். தாமோதரன், இருவர் நெற்றிகளிலும் விபூதியிட்டு விட்டு, தங்கையையே பார்த்தான். அவளோ, இன்ஸ்பெக்டர் அண்ணன் மோதிரம் போடப் போகிறான் என்று எண்ணி, தனது விரல்களை விரித்து விரித்து மடித்தாள். மடித்து மடித்து விரித்தாள். அவன் பேசாமல் இருப்பதைப் பார்த்து விட்டு, புதுக்கணவனை இடுப்பில் இடித்து உள்ளறைக்குள் கூட்டிக்கொண்டு போய்விட்டாள்.

தாமோதரன், ஆண்களும், பெண்களுமாய் நிறைந்த கூட்டத்தைப் பார்த்தான். ஒரு வேளை தமிழரசி வந்திருப்பாளோ? எப்படி வருவாள்? அவள். என்னை மாதிரி மானங்கெட்டவள் இல்லியே!

பார்த்துக் கொண்டிருந்த தாமோதரன் கண்களில், கலாவதிக்கு தோட்டத்தில் சூடு போட்ட பஞ்சபாண்டவர்கள் தென்பட்டார்கள். புண்ணியத்தைத் தவிர, உலகில் வேறு எதையுமே செய்யாதவர்கள் போல, அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த கூட்டத்திற்கு பரிமாறிக் கொண்டிருந்தார்கள். தாமோதரன், எதேச்சையாய் கோபப்பட்டு, இடுப்பில் இல்லாத கைத்துப்பாக்கியைத் தேடினான். அண்ணனை ஆவேசமாகப் பார்த்தான்.

சாப்பாடு முடிந்ததும், கூட்டம் குறைந்து கொண்டும், தலைவர்கள் கூட்டம் கூடிக் கொண்டும் இருந்தன. இன்ஸ்பெக்டர் வந்து விட்டதால், சின்னத் தலைவர்களும், வந்து விட்டார்கள். புதுமாப்பிள்ளை ராஜதுரையும்,