பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

நெருப்புத் தடயங்கள்


தாமுவைப் பெருமிதமாய் பார்த்தபடியே, அவனருகே வந்து உட்கார்ந்தான். முத்துலிங்கம் மனைவி, இலையும், செம்புமாக வாசல் கதவில் சாய்ந்தபடி, கொழுந்தன் தாமுவின் பார்வை படுவதற்காகத் தவமாய் நின்றாள்.

முத்துலிங்கம், பெரிய மனிதர்களைப் பார்த்தபடியே, தம்பியிடம் 'டா' போட்டுக் கேட்டார்:

"எத்தன நாளுடா லீவு போட்டிருக்கே?"

"லீவா? நானா? ஆம்... ஆம்..."

"நான் எதுக்குச் சொல்றேன்னால், நீதான் தங்கச்சியையும், மாப்பிள்ளையையும் குற்றாலத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போகணும். லீவு நிறைய போடாட்டால், இப்பவே 'வந்த இடத்துல உடம்புக்கு சுகமில்ல'ன்னு ஒரு தந்தி அடிக்கணும், அதுக்காகத்தான் சொன்னேன்"

தாமோதரன், அண்ணனை ஏற இறங்கப் பார்த்தான். பொங்கிய சினத்தைத் தன்னிடமே தங்க வைத்தபடி "கவலப்படாதே! இனிமேல் நான் வேலைக்குப் போனாலும் சேர்த்துக்க மாட்டாங்க" என்றான்.

"என்ன சொல்ற?"

"வேலையை ராஜினாமா செய்துட்டேன்."

"என்னப்பா சொல்ற? என்னடா சொல்றே? என்னல சொல்றே?"

"ஒரு தடவை சொன்னால் ஒனக்குக் கேட்காதா? ஒன்னோட பாவத்துக்குக் கூலியாய், என்னோட வேலையை விட்டுட்டு வந்துட்டேன்."

பெருந்தலைகள் மலைத்துப் போயின. ஒரு ஓரமாய் உட்கார்ந்திருந்த அப்பாக்காரர் எழுந்து வந்தார். முத்துலிங்கம், கண்கள் சிவக்க தம்பியையே பார்த்தார். அவர் உடம்பு ஆடியது. பற்கள் கடியுண்டன. மலைத்த தலைகளில் மலைக்காத தலைவரான லோகல் அரசியல்வாதி