பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

239

மொய்தீன், முத்துலிங்கத்தைத் தொட்டபடி "கவலப் படாதே முத்து. இவர் ராஜினாமாதானே செய்திருக்கார். அதை ஏத்துக்கணுமுன்னு என்ன வந்திருக்கு. இன்னைக்கே நாகர்கோவில் எஸ். பி. க்கு டிரங்கால் போட்டு ராஜினாமாவ திருப்பி அனுப்பச் சொல்றேன். வேணுமின்னால் மினிஸ்டர்கிட்டே..." என்றார்.

தாமோதரன், கோபத்தோடும், குமுறலோடும் பேசினான்.

"நான் அரசியல் வாதியல்ல, ராஜினாமாவை வாபஸ் வாங்க."

முத்துலிங்கம், தம்பியின் பக்கம் கோபமாய் நெருங்கிக் கேட்டார்;

"யார் கிட்ட கேட்டு வேலையை விட்டே?"

"நீ யார் கிட்ட கேட்டு கலாவதிக்கு சூடு போட்டே? யார்கிட்ட கேட்டு மாடக்கண்ணு மாமாவை கிணத்துக்குள்ளே தள்ளினே?"

திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில், முத்துலிங்கம் தம்பிமேல் பாய்ந்தார். அவன் தலையைப் பிடித்து, தனது இரண்டு கால்களுக்கு இடையே வைத்துக் கொண்டு, அவன் முதுகில் மாறி மாறிக் குத்தினார். "ஒன்னை இதுக்கா கஷ்டப்பட்டு படிக்க வச்சேன். அற்பப் பயலே?" என்று சொல்லுக்குச் சொல்லாய், திட்டுக்குத் திட்டாய் அடித்தார்.

தாமோதரன், சிலிர்த்தெழுந்த போது, முத்துலிங்கம் கீழே விழுந்து கிடந்தார். அவரை கொலைகாரனாய் நினைத்து அவர் கழுத்தில் இடறப்போன கால்களை, தமையனாய் நினைத்து இருத்திக் கொண்டான். இதற்குள் அங்குமிங்குமாய் நின்ற கூட்டம் அங்கே ஒன்றாய்த் திரண்டது. புதுப்பெண் விஜயா, அலறியடித்தபடி அண்ணன்களுக்கு இடையே நின்றாள். ராஜதுரை, பெரியமச்சானை அனுதாப-