பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

நெருப்புத் தடயங்கள்


மாகவும், சின்ன மச்சானை அசிங்கமாகவும் பார்த்தபடியே, குத்துக்கல்லாய் இருந்தான். வாசலில், இலையும் நீர்ச் சொம்புமாய் நின்ற முத்துலிங்கம் மனைவி, அவற்றை வீசியெறிந்து விட்டு, கூட்டத்துள் வந்து கூக்குரலிட்டாள். கணவனை அதட்டினாள்.

"ஒமக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். தம்பி தம்பின்னு நீரு கழனில கஷ்டப்பட்டு, அவனை பல்லாக்குல வச்சீரு, நாயைக் குளிப்பாட்டி நடு வீட்ல வச்சாலும், அது காளு காளுன்னு கத்தாமல் இருக்குமா? நீரு நாகர்கோவிலுக்கு, தம்பின்னு, போலீசுக்கு தப்பிப் போன போது, ஒம்மை எந்த மாதிரில்லாம் கேட்டான்? நீரே சொல்லிச் சொல்லி என்கிட்ட அழலியா? அந்த நன்றி கெட்டத்தனத்துக்குத்தான் கடவுள் இவனுக்குக் கூலி கொடுத்திருக்காரு. எவனும் எப்படியும் போவட்டும். சொத்துல ஒம்மைதவிர எவனுக்கும் எதுவும் கிடையாதுன்னு மட்டும் சொல்லிடும்."

"நான் எதுக்குடி சொல்லணும்? சொத்துன்னு கேட்டான்னால் ஒரே வெட்டுத்தான்."

தாமோதரன், ஆறு வயதுக் குழந்தையாகி, அருகே நின்ற தந்தையைப் பார்த்தான். கண் பொங்கப் பார்த்தான். பொறுப்புக்களை மூத்த மகனிடம் விட்டு விட்டு, தானுண்டு, சாராயம் உண்டென்று இருக்கும் அந்த மனிதர், இப்போது தனக்குப் பேச அவகாசம் கிடைத்ததைப் பயன்படுத்திக் கத்தினார்.

"பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாய் கொடுத்து வாங்குன வேலையை விட்டுட்டியடா அயோக்கியப் பயலே! இனிமேல் எனக்கு ஒருவன் தான் மகன். நீ என் முகத்துல விழிக்கப்படாது. சொத்துல ஒனக்கு ஒரு துரும்பு கூடக் கிடையாது. மரியாதையாய் வீட்டை விட்டு வெளில போ. ஏல முத்துலிங்கம்! அந்த ஓடுகாலிப் பயலை கழுத்தைப் பிடிச்சு வெளில தள்ளு. நீ தள்ளுறியா, நான் தள்ளட்டுமா?"