பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

247


எனக்கு ஒரு கதைதான் நினைவுக்கு வருகிறது. குழந்தை நோயில் கிடக்கும்போது ஒருத்தி சினிமாவுக்குப் புறப்பட்டாளாம். பெற்ற பிள்ளைக்கு மருந்து கொடுத்தால், சினிமா துவங்கிவிடும் என்று நினைத்து, வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று வேக வேகமாய் போனாளாம். சினிமா முடிந்து திரும்பும்போது, குழந்தை செத்துக் கிடந்ததாம். கதறிக் கதறி அழுதாளாம். இவள் கதைக்கும், நாம், இலங்கைத் தமிழர்களுக்காய் கண்ணீர் விடுவதற்கும் என்ன வித்தியாசம்? அந்த நாட்டில், கடந்த ஐந்தாண்டுகளாக சிங்களவர்கள், தமிழர்கள் மீது கொலை, கொள்ளை, கற்பழிப்பு தீச்செயல்களில் ஈடுபட்டது, நம் தலைவர்களுக்கும், பத்திரிகைகளுக்கும் தெரியும். தெரிந்தது, மக்களிடம் தெரிவிக்கப்பட்டதா? இல்லை. தலைவர்கள், பிறந்த நாளில் ஒரு போஸ்டரும், பிறக்காத நாட்களில் பல போஸ்டர்களும் போட்டு, விழா மயமானார்கள். பத்திரிகைகளோ, சினிமாக்காரர்களின் அந்தரங்க வாழ்க்கையை தோண்டிக் கொண்டு இருந்தன. இதனால், இலங்கைத் தமிழர்களுக்கு, ஆதரவு தெரிவிக்கும் தகுதிகூட நமக்கில்லை. ஐந்தாண்டுகளுக்கு முன்பே, நாம் தமிழகத்தில் ஒரு வலுவான இயக்கத்தைத் தோற்றுவித்திருந்தால், இலங்கையில் இனப்படுகொலை, ஒருவேளை நடந்திருக்காது. காரணம், சக்திகளிலேயே பெரியது மனோசக்தி. இது சிங்களவர்களை ஆட்கொண்டிருக்கும். ஒரு வகையில், இலங்கைக் கொலைகளுக்கு, நாமும் பங்குதாரர்களே. ஆகையால் இப்போது நாம் மேற்கொள்ளும் ஊர்வலம், ஒரு பிராயச்சித்தம்; நம்மை நாமே கேட்டுக் கொள்ளும் ஒரு சுய மறுவாய்வு நடவடிக்கை. "ஏசுநாதர் இலங்கைத் தெருக்களில் மரித்துவிட்டார்" என்ற வாசக அட்டைகளுடன், கிறிஸ்தவப் பெருமக்கள் எப்படி மௌனமாக நடந்தார்களோ, அப்படி நடப்போம்."

தமிழரசி, கொடிமேடையில் இருந்து கீழே இறங்கினாள். அவள் பேச்சுக்குக் கைதட்டாமல் மாணவிகள்,