பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

நெருப்புத் தடயங்கள்


தங்கள் முதிர்ச்சியைக் காட்டினார்கள். ஒரே ஒரு மாணவி மட்டும், "மேடம், டி. வி. வர்லியா?" என்றாள். தமிழரசியும் இங்கிதம் தெரியாமல் சீறினாள்.

"ஒனக்கு அறிவிருக்காடா? டி. வி. க்காரங்க வராததைப் பற்றி நாம ஏன் கவலப்படணும்? விடிய விடிய ராமாயணம் கேட்ட மூடன் கதை தான் ஒன் பேச்சு. டி. வி. க்குத்தான் இந்த மாதிரி ஊர்வலங்கள் தேவையே தவிர நமக்கு டி. வி. தேவையில்ல. நாம நம் உணர்வுகளை வெளிப்படுத்தத்தான் போகிறோம். வெளிச்சம் போட இல்ல. இப்பெல்லாம் சில சங்கங்களும், தனி நபர்களும், டி. வி. வருமுன்னு உறுதிப்படுத்தின பிறகு தான் உண்ணாவிரதத்தையே துவக்குறாங்களாம். இது பிணங்களைக் கொத்துற கழுகுத்தனத்தை விட மோசமானத்தனம். நாமெல்லாம் பப்ளிஸிட்டி மோகிகள் என்கிறதால தான், சினிமா நடிகர், நடிகைகள் போன ஊர்வலத்தை எல்லாப் பத்திரிகைகளும் 'நடந்தே போனார்கள்' என்று பெரிசாய் போட்டாங்க. இலங்கையில் தமிழன் ரத்தம் பெருக்கெடுக்கு. 'தமிழர் மாமிசம்' கிடைக்குமுன்னு போர்டு போடுறாங்க. அதுக்கான ஊர்வலத்தில நடிகர் நடிகைகள் நடந்து போனது, நம்ம பத்திரிகைக்காரங்களுக்கு பெரிய நியூஸ். ஒன்னை மாதிரி... என்னை மாதிரி... எல்லாரும் எதைப் போட்டாலும் சிந்திக்காமல் படிப்போமுன்னு அவங்களுக்குத் தெரியும். சினிமாக்காரனுக்கும்... சினிமாக்காரிக்காகவும்.. இலங்கைத் தமிழரை மட்டுமில்ல, எல்லாரையும் விட்டுக் கொடுப்போமுன்னு அவங்களுக்குத் தெரியும்."

கேட்ட மாணவி தலைகுனிந்தபோது, மற்ற மாணவிகள் "ஏய்... ஏய்... முந்திரிக் கொட்டை..." என்று உஷ்ணமாய் கேட்டார்கள். உடனே தமிழரசிக்கு தன் தவறு புரிந்தது, தான் படித்த பிரஷ்நேவின் 'கன்னிநிலம்' புத்தகம் நினைவுக்கு வந்தது.