பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

251


அவனுக்காக நின்றாள். அவன் வந்ததும் அவனுக்கு இணையாக நடந்தாள். நடந்தவர்கள் நடையை நிறுத்தி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அதற்குள் சாரி சாரியாய் வந்த மனித நெரிசலுக்கு வழிவிட்டு அவன் முன்னாலும், அவள் பின்னாலுமாய் நடந்தார்கள். தாமு அவளுக்காக நடையைத் தளர்த்த, அவள் ஓடி வந்தாள். சிறிது நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு இணையாய் நடந்தார்கள். தமிழரசி அவனிடம் "ஆளே அடையாளம் தெரியாமல் போயிட்டீங்களே" என்றாள். அவன் சிறிது யோசித்து விட்டு, "உயிரோடயாவது இருக்கேனே" என்றான். அவனையே பார்த்த தமிழரசி, மீண்டும் மனித நெரிசலுக்கு வழிவிட்டு, ஜோடி பிரிந்து, பின்னால் தனியாய் நடந்தாள். பிறகு அவன் நடையைக் குறைக்க, இவள் கூட்ட மீண்டும் இணையான போது "ஒரு லட்டர் போடக் கூடாதா" என்றாள், முகத்தைத் திருப்பி, கண்களைத் துடைத்துக் கொண்டாள்.பின்னர் கண்ணை மூடிக்கொண்டு நடப்பவள் போல், அவனை முந்தி நடந்து, சிறிது தூரத்திற்குப் பிறகு திரும்பிப் பார்த்தாள். அவன் வருவது வரைக்கும் காத்திருக்கப் பொறுக்காதவள் போல், வந்த வழியிலேயே திரும்பி நடந்து, அவனுக்கு ஜோடியாகி "என் மேல கோபந்தானே?" என்றாள் அவன், "நான் கேட்க வேண்டியது..." என்றான்.

இருவரும் மவுனமாகி, நீண்ட நடை நடந்து கடல் மண்ணில் நடந்தார்கள். அங்கே ஜோடி ஜோடியாக, தொட்டும், தொடாமலும், பேசியும், பேசாமலும் இன்பப் பூரிப்பில் இருந்த இளசுகளை, தமிழரசி அங்கீகரிப்போடு பார்த்தாள். முன்பு தோழிகளோடு இந்தப் பக்கம் வந்த போது 'சீ, விவஸ்தை கெட்டதுகள்' என்று காதல் வயப்பட்டவர்களின் காது வயப்படப் பேசியவள், இப்போது அவர்களை, 'இன்னும் நெருக்கமாய் உட்காரலாமே,' என்று கேட்பதுபோல் பார்த்தாள். குறிப்பிட்ட ஒரு