பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

253


தெரிந்தால், இவள் என்னைப்பற்றி என்ன நினைப்பாள்?" நான் போகட்டும், இவள் மனம் என்னபாடு படும்? நான், கெட்டவைகளை மூடி மறைத்ததுபோல், இவள் கிட்டேயும் மூடி மறைக்கலாமா? கூடாது, கூடவே கூடாது! இவளிடம் சொல்லித்தான் ஆக வேண்டும். இந்தத் தாயின் மடியில் புரண்டு, சொல்லிச் சொல்லி அழத்தான் வேண்டும். ஆனால் இன்றைக்கு அல்ல, நாளைக்கு. நாளைக்கே. இந்த இனிமையான நேரத்தை, நிதர்சனத்தில் சூடாக்க மாட்டேன். வாழ்க்கையில் வாராதது போல் வந்த இந்தப் பொழுது, ஒரு பொய்ப் பொருளாய் போனாலும், அழுபொழுதாய்... அழுகும் பொழுதாய் ஆகலாகாது.

தமிழரசி கீழே உட்கார்ந்து அவன் விரல்களைப் பற்றிய படியே "ஏன் எழுந்திட்டீங்க? என் பக்கத்துல உட்கார ஒங்களுக்குப் பிடிக்கலியா?" என்றாள். அவன் உட்காராமலே "பிடிக்காமல்தான் ஒன்னைப் பார்க்கணுமுன்னு வந்தேனா?" என்றான். அந்தப் பதிலில் மெய் சிலிர்த்த, தமிழரசி, "சாரி! கலாவதி எப்படி இருக்காள்? போலீஸ் அடி கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீண்டுட்டாளா?" என்றாள்.

"உம், மீண்டுட்டாள்."

"சித்தப்பா?"

"ஒரேயடியாய் மீண்டுட்டார்!"

தாமோதரன், தன்னை இழிவாகப் பார்த்துக் கொண்டான், தர்மர் 'அஸ்வத்தாமா' என்று சொன்னதுபோல், பொய்க்கு மெய்வடிவம் கொடுத்தாச்சு. மாடக்கண்ணு மாமா மரணத்தாலும், கலாவதி மூளை பிசகியும், மீண்டு விட்டதாக அனுமானித்தது ஒரு வகையில் சரிதான். அடேடே! இப்பகூட உண்மையைத்தான் பேசியிருக்கேன்.

தமிழரசி, மீண்டும் எதையோ கேட்கப் போனாள். தாமோதரன், பேச்சை மாற்ற நினைத்தான், பொன் மணியோ, வினை தீர்த்தானோ அவனுக்கு இப்போது ஒரு