பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

255


மவுனமாகப் பற்றியபடி இலக்குத் தெரியாமல் சுற்றிச் சீரணி அரங்கின் அருகே உட்கார்ந்தார்கள். தமிழரசி அவன் விரல்களுக்கு சொடுக்கு விட்டபடியே கேட்டாள்.

"டூட்டிக்கு எப்போ போகணும்?"

"வீட்டுக்கா?"

"டூட்டிக்கு?"

"போகணும் ஒரே வழியாய் ...ஸாரி... ஒரு வழியாய் போகணும்."

"நீங்க டூட்டிக்கு போவீங்களோ...மாட்டீங்களோ, நமக்குத் தெரியாதுப்பா. இன்னும் நாலு நாளைக்கு என்னை விட்டுப் போகப்படாது. போக விடமாட்டேன். வேணுமுன்னால் 'சிக்' லீவு கேட்டு தந்தியடிங்க."

தாமோதரன் முகம் உறைந்தது. அண்ணனும், கல்யாண வீட்டில் இப்படித்தான் சொன்னான், அப்புறம் வேலையை விட்டது தெரிந்ததும் அடித்தான், இவளும், தன் வேலையை காட்டியது தெரிந்ததும், அடிக்கப் போகிறாள். அது நோயடி... இது மரணடி...

தாமோதரன் புலம்பலாய் கேட்டான்.

"ஒரு வேளை... நான் இங்கேயே இருந்து, அதனால் என் வேலை போய்விட்டால் என்ன செய்வே?"

"சந்தோஷப்படுவேன்! என் தாமு ஏழை பாழைகளை இனிமேல் அடிக்க மாட்டார்னு ஆனந்தப்படுவேன். நீங்க சப்-இன்ஸ்பெக்டர்னு காதலிக்கல. அந்தப் பதவிக்குப் போறதுக்கு முன்னாலேயே காதலிச்சவள். சப்-இன்ஸ்பெக்டராய் ஆன பிறகும் தொடர்ந்து காதலிச்சேனே, அதுவே என் அசைக்க முடியாத அன்பை காட்டலியா? ஏன் கன்னா பின்னான்னு உளறுறீங்க?"

"என்னமோ தெரியல... இப்போல்லாம் என்ன பேசுறோமுன்னு எனக்கே தெரிய மாட்டங்குது."