பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

நெருப்புத் தடயங்கள்


அவனுள் அவள் வயப்பட்ட காதலும் மட்டும் தங்கியிருப்பது போலிருந்தது. உயிர், காதலாகி தனித் தன்மையை இழந்தது மாதிரியான பிரமை; அவன், உணர்ச்சிப் பிழம்பாகி, அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். இதை எதிர்பாராததால், அவனைப் பொய்க் கோபமாய், நாணத்தில் தேய்ந்த வார்த்தைகளால் பேசி, சிறிது தன்னை நகர்த்தப் போனவள் அவன் பக்கம் நகர்ந்து, அவனைக் கட்டிப் பிடித்து, பதறிப் பேசினாள்.

"எத்தான், என்னத்தான் இது, ஏன் அழுகிறீங்க? அட எதுக்குத் தான் அழுகிறீங்க?"

தாமோதரன், மீண்டும் தன் வசமானான். அவனையே பார்த்திருந்த தமிழரசி, அவன் கண்களைத் துடைத்தபடியே, தன் கண்களைப் பொழிய விட்டாள். தாமு, அவள் கண்களைத் துடைத்து விட்டான். நடந்தவைகளுக்காக, தாமு வருத்தப்படுகிறான் என்பதைப் புரிந்து கொண்ட தமிழரசி, பழைய ரணத்தைக் கிளற விரும்பவில்லை. ஒருவரை ஒருவர் அணைத்தபடி, இருவரும் காலத்தை மறந்து, காலங்காலமாய், அந்த கடற்கரையிலேயே காதல் நினைவுச் சின்னங்களாய் நிரந்தரமாய் இருக்கப் போவது போல் இருந்தார்கள். கடற்கரைக் காதலர்கள் போய்விட்டார்கள். சுண்டல் பையன்கள் போய் விட்டார்கள். கிராக்கிகளும், கிராக்கர்களும் போய் விட்டார்கள். கடற்கரை ரவுடிகள் கூட, காலிழைத்து நின்று போனார்கள். தமிழரசி சுதாரித்தாள்.

"போகலாமா?"

"இதுக்குள்ளேயா?"

"நாளை வரத்தானே போகுது!"

"அதனால தான் போக மனம் வர்ல"

தமிழரசி எழுந்து, இன்னும் எழாமல் இருந்த தாமோதரனைத் தூக்கினாள். "எப்போ... என்ன கனம்..."