பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

261


சித்தப்பா... அடேய் முத்துலிங்கம், அடேய் தாமு...' என்று முணங்கி முணங்கி அரற்றினாள். பத்மா கட்டிலில் உட்கார்ந்து தமிழரசியின் தலையை தன் மடியில் போட்டபடி "என்ளடி எழுதியிருக்கு? 'இடுக்கண் வந்தால் நகுக' என்று வள்ளுவர் சொன்னதை எனக்குச் சொல்லிட்டு. இப்படிப் புலம்பலாமாடி?" என்றாள்.

தமிழரசி அவள் மடியில் தலைபுரட்டி, கண்ணில் நீர் புரட்டிக் கத்தினாள்.

"வள்ளுவர்... பெண்ணாகவோ, இல்ல ஏழையாயோ,.. இருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டாரு. இந்தாடி லட்டரு. கடவுளே! மேசமானவங்களால மோசமாய் போயிட்டோமே. பத்மா, இந்த லட்டரைப் படிச்சுக் காட்டுடி. என் உயிர் போறதுக்கு முன்னால ஒரு தடவை படிச்சுக் காட்டுடி. படிடி. ஒருவேளை நான் தான் தப்பாய் புரிஞ்சுட்டேனோ என்னவோ, படிப்பா!"

பத்மா, தமிழரசியின் கையில் துவண்ட கடிதத்தை வாங்கினாள். கோணல் கோணலான எழுத்துக்கள். தமிழரசி, அவள் விலாவை இடித்தாள். பத்மா படிக்கத் துவங்கினாள்.

"தமிழரசிக்கு,

நீ, நல்லவளோ... கெட்டவளோ... ஒனக்கு ஒன்றை எழுத வேண்டியது என்னோட கடமை! இவ்வளவு நாளும், யோசித்து யோசித்து இன்னைக்குத்தான் எழுதுறேன். 'தான் ஆடாட்டாலும் சதை ஆடும்' என்பார்கள். நீ ஊருக்கு வராததில் இருந்து உனக்கு நம்பவூர் அசிங்கங்கள் தெரியாதுன்னு நினைக்கிறேன். ஒருவேளை தெரிஞ்சதால தான் வராமல் இருக்கியோ என்னமோ?"

"நீ மெட்ராஸ் போன ராத்திரியிலேயே, முத்துலிங்கம் ஒன்னோட சித்தப்பா பைத்தியாரத் தர்மரையும், அவரோட மகளையும் ஆட்களை வச்சு அவன் தோட்டத்துக்கு ராத்திரியோட ராத்திரியாய் தூக்கிட்டுப் போனான்.