பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

263

வழி செய்துட்டாவது போ, நீ சுய நலக்காரியா, பொது நலக்காரியா தெரியணும்!

இப்படிக்கு
உண்மை விளம்பி."

தமிழரசி, ஓவென்று கூச்சலிட்டாள்.

ஆமாம். நான் சுயநலக்காரிதான். சித்தப்பாவையும், கலாவதியையும் போலீஸ் அடிச்ச பிறகும், அவங்களை நிர்க்கதியாய் விட்ட பாவி நான், தாமோதரன் மேல இருந்த காதலால , அவருக்கு ஏதாவது தீமை வரப்படாதுன்னு, ஊர்ல நடந்ததை சென்னையில பெரிய போலீஸ் அதிகாரிங்ககிட்ட புகார் செய்யாத பாவி நான். அல்லும் பகலும் அற்பத்தனமான தாமோதரன் மேல் இருந்த மயக்கத்தால, ஊர்ல நடந்ததை கேட்கக்கூட நேரமில்லாமல்போன வில்லி நான். அய்யோ ... சித்தப்பா .... கலா....

தமிழரசி, சொல்ல மாட்டாது அழுதாள். பிறகு அசைவற்றுக் கிடந்தாள். ஒருவருக்கு என்றால் ஒரேயடியாய் அழலாம். ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு எப்படி அழுவது? சித்தப்பாவுக்கா... கலாவுக்கா... கனவாய் போன தன் காதலுக்கா?

தமிழரசியையே கண்களில் நீர் சொட்டக் கவனித்த பத்மாவிற்கு மனதில் ஒரு பொறி கிளம்பியது. அதில் அவளுக்கே நம்பிக்கை இல்லையானாலும் ஆறுதலைக் கருதி, அதட்டிச் சொன்னாள்.

"என்னடி நீ, சின்னப்பிள்ளை மாதிரி? எவனோ ஒரு ஸ்கௌண்டிரல் பொறுக்கி நடந்ததையும், நடக்காததையும் சேர்த்து எழுதியிருக்கான்; அவன் ஆசைப்படுறதை செய்தியாக்கிட்டான். எனக்கென்னமோ, அவன் சொன்னபடி எதுவுமே நடந்திருக்காதுன்னு நினைக்கேன்."