பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

நெருப்புத் தடயங்கள்


அசைவற்றுக் கிடந்த தமிழரசியின் கையாடியது, காலாடியது. எழுந்து உட்கார்ந்து பத்மாவின் கைகளைப் பிடித்தபடி கெஞ்சினாள்.

“பத்மா! என்னைப் பார்த்து இன்னொரு தடவை சொல்லுடி. என் சித்தப்பா உயிரோடதான் இருப்பாரா? என் கலா சுயபுத்தியிலதான் இருக்காளா? என் தாமு நல்லவன்தானா?”

“அந்த மடையனைப் பற்றி இப்போ ஏண்டி பேசுறே? மனசுல சந்தேகமும், பயமும் வந்துட்டால் அதுவே பீதியாகும். என்றைக்குமே மொட்டை லட்டர்களை பெரிசாய் எடுக்கப்படாது. அப்டி எடுத்தால் நாமதான் மொட்டையாவோம். நீ அழுகிறது மாதிரி எதுவும் நடந்திருக்காது. வேணுமுன்னல் பாரேன்.”

“அப்படியா சொல்றே! ஒண்ணு செய்வோமா?... அடையார்ல, எங்க ஊருக்குப் பக்கத்து ஊர்க்காரர் இருக்கார். ஒரு ஆட்டோவுலயோ, டாக்சியிலயோ ரெண்டு பேரும் போய் கேட்டுட்டு வருவோமா?”

“இப்பவே மணி பன்னிரண்டு. இந்த மெட்ராஸ்ல பெண்கள் பகல் நேரத்துலயே தனியாய் போக முடியாது. காலையில் போவோம்.”

“அதுவரைக்கும் என் உயிர் தாங்காதடி.”

“என்னடி நீ குழந்தை மாதிரி...”

“பத்மா...என் கூட எவளும் பிறக்கல...தங்கை மாதிரி நினைச்சவள் பைத்தியமாய் போயிட்டாலும் எனக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கல. ஏன் தெரியுமா? ஒரு தங்கை உருப்படாமல் போயிட்டாலும், இன்னொரு தங்கை-என் கூடப்பிறக்காத சகோதரி-இந்த அறையிலயே இருக்கிறதுனாலதான் நான் கோப்பெருந்தேவி மாதிரி சட்டுன்னு சாகாமல் இருக்கேன்டி.”