பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

நெருப்புத் தடயங்கள்


டேய் கில்லாடியான்...யார் வீட்ல வந்து நிக்கோ முன்னு கொஞ்சம் யோசிச்சிட்டு, அப்புறமாய் நீ என்ன செய்யணுமோ அதைச் செய்’ என்றார்.

‘பைத்தியாரத் தருமரு’ மாடக்கண்ணு, அங்கே எதுவுமே நடக்காததுபோல் கால்களைச் சேர்த்த கையை விடாமல், உடம்பை ஒரு சின்ன நெளிப்புக்கூட நெளிக்காமல், மகளையும், மண்டையனையும் மாறி மாறிப் பார்த்தார்.

தமிழரசி சற்றுமுன்னுல் நடந்து வந்து, வினைதீர்த்தானின் கையை, மண்டையனின் பின் மண்டையில் இருந்து எடுத்து விட்டு, ‘என்ன இதெல்லாம்? விஷயம் தெரியாமலே சண்டை போடப் போனால் எப்படி?” என்றாள்.

‘அதத்தான் நானும் சொல்றேன். அடிச்சாலும் நான் என்ன சொன்னேங்றதை சொல்லிட்டு அடிங்க’ என்றான் மண்டையன். கில்லாடியார், எல்லோரையும் கருடபார்வை பார்த்துக் கொண்டிருந்தார். தமிழரசி தவிர, இதர பெண்கள் கைகளைப் பிசைந்தார்கள். வினை தீர்த்தான், தமிழரசிக்குக் கட்டுப்பட்டு, மண்டையனை அடிக்க முடியாமல் போன குறையை பேச்சில் காட்டினான்.

‘ஏல...மண்டையா, பேசுனதையும் பேசிப்பிட்டு...நீ பேசுனதை என்னையே திருப்பிச் சொல்லச் சொல்றியா? மூதேவி!’

கில்லாடியார், சாடினார்:

‘என்னடா இது...சும்மா நேரப் போக்குக்கு காசு வைக்காம சீட்டு விளையாடிக்கிட்டு இருந்தோம். அசக்குன்னு இவனை தூக்கிக்கிட்டு வந்ததும் இல்லாம, அதட்டவா செய்யுற? இந்தப் புத்தியாலதான் ஒப்பன் சொத்து ஊர்ல போச்சுது. அந்த பைத்தியார தர்மரு வயித்துல நீயா பிறக்கணும்? அததான் ராமையா