பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

நெருப்புத் தடயங்கள்

கோபால், தூக்கம் கலைவதற்கு ஐந்து நிமிடமும், ஐந்து நிமிடம் துள்ளி எழுவதற்கும் நேரம் கொடுத்து நின்றாள். பிறகு, பத்மாவைப் பார்த்து “பதிலே இல்லியே?” என்றாள்.

“இந்தா பாரு தமிழு. ஏதாவது நடந்திருந்தாலும் அதை இனிமேல் மாற்ற முடியாது!”

“என்னடி நீ, கொஞ்ச நேரத்துக்கு முன்னல எதுவும் நடந்திருக்காது என்று எனக்கு உயிர் கொடுத்தே. இப்போ...”

“எதுவும் நடந்திருக்காதுன்னு இப்பவும் நினைக்கேன். அதனால காலையில...”

“முடியாதுடீ... நீ வந்தாலும் வராட்டாலும் அண்ணு நகர் சீமா லாட்ஜ்ல, அவரைப் போய் கேட்கப் போறேன்.”

“எவனைடி?”

“அதுதாண்டி தாமோதரன். இன்னைக்கு வந்திருந்தார்டி... வந்திருந்தாண்டி... அவர்... அவன் கூடத்தான் கடற்கரைக்குப் போனேன். அப்புறம் ஓட்டலுக்குப் போனேன். அண்ணா நகர்ல தங்கியிருக்கார். இப்பவே போய், ஊர்ல நடந்ததை கேட்டுட்டு வரணும். இந்தாப்பா வாட்ச்மேன்! ஒரு ஆட்டோ...”

“ஒனக்கு மூளை இருக்காடி! ஒருவேளை ஊர்ல, லட்டர்ல சொன்னது மாதிரி நடந்திருந்தால்... நீ அடிக்கடி சொல்ற அந்த தாமோதரன் ஒரு ஜென்டில்மேன் – அயோக்கியன். லேடி – கில்லர். இப்போ நீ அங்கே போய், உண்மை தெரியாமல் இருக்க ஒன்னையும் அவன் ஏதாவது செய்திட்டால்? ஏதோ திட்டம் போட்டுத்தான் ஒன்னைப் பார்க்க வந்திருக்கான். டர்ட்டி பெல்லோ... டாங்கி...”

“என்ன பத்மா, எதுவும் நடந்திருக்காதுன்னு நீதான் சான்னே. உண்மை தெரியுமுன்னலே பிறத்தியாரை திட்டப்படாது டி.”