பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

நெருப்புத் தடயங்கள்

போன் சுழற்றினாள். பதிலில்லை. மீண்டும் மேலே வந்தாள். சித்தப்பா, ஆவியுருவில் ‘நீ பாதுகாப்பு கொடுக்கலே’ என்று முறையிட்டார். கலாவதி ஆள்காட்டிவிரலை அவளை நோக்கிக் காட்டினாள்.

தமிழரசி தூக்கத்திற்கும், சுய பிரக்ஞைக்கும் இடைப்பட்ட நிலையில் கிடந்தாள். ஆறுமணியடித்தபோது அவளால் எழுந்திருக்க முடியவில்லை. தாமோதரனே அவன் அறையில் சந்திக்க விரும்பவில்லை. மனம் பயங்காட்டியது. எப்படியும் வருவான் வரட்டும்

வாட்ச்மேன் வந்து ‘காப்பிக்கு’ தட்டினான்.

தமிழரசி, தூங்கிக் கொண்டிருந்த பத்மாவின் ஆடைகளைச் சரிசெய்துவிட்டு, கீழே இறங்கினாள். இன்னொரு தடவை ராஜகோபாலுக்கு போன் செய்யலாமா?... தாமோதரன் லாட்ஜூக்கு டெலிபோனில் தொடர்பு கொள்ளலாமா? மனம் ஒப்பவில்லை. கடிதம் காட்டியவை உண்மைதான் என்பது தெரிந்துவிடுமோ என்ற பயம். தாமோதரன் முழு உண்மையைச் சொல்லாமல், நழுவி விடக்கூடாதே என்ற அச்சம். தாமோதரன் வருவதற்கு முன்புள்ள இந்த இடைவேளைதான், இனிமேல் வாழ்க்கையிலேயே வரும் துக்கம் குறைந்த நேரம் என்று நினைத்தாள். காபியை, தானும் குடிக்காமல், பத்மாவை எழுப்பி குடிக்க வைக்காமலும், கட்டிலில் மீண்டும் சாய்ந்தாள்.

அப்புறம், பத்மாதான் அவளே எழுப்பினாள். தமிழரசி, வாரிச் சுருட்டி எழுந்தாள். முகத்தைக் கழுவிவிட்டு, முந்தானையால் துடைத்தபடி, வெளியே வந்தாள். விடுதியின் கேட்டிற்கு வந்து, தாமோதரன் வருகிருன என்று எட்டி எட்டிப் பார்த்தாள். இறுதியில் சோர்வுற்று, வரவேற்பறையில் சோபாவில் சாய்ந்தாள். முன் கைகளில் முகம் கவிழ்ந்து, எவ்வளவு நேரம் இருந்தாளோ... அவளுக்கே தெரியாது. ‘தமிழு’ என்ற சத்தங் கேட்டு, கண் விழித்தாள்; தாமோதரன்!