பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

271

வனாய் தெரியல. அவன், நடந்ததுக்குப் பொறுப்பில்ல. நடந்ததுக்குப் பிறகு நடந்ததுக்குத்தான் பொறுப்பு. நாம நேர் கோட்ல போறதாய் நினைச்சுத்தான் வாழ்க்கையில் நடப்போம். ஆனால் வாழ்க்கை வட்டக்கோடு, நடக்கிறவனுக்கு அந்த வட்டம் நேர் கோடாய் தெரியும். பார்க்கிறவனுக்குத்தான் அது வட்டமுன்னு புரியும். இதுக்கு சுய நலம். சொத்து சுகம் என்கிற மையத்துல, இந்த சமூக அமைப்பு உழல்வதே காரணம். இந்தக் காலக் கட்டத்துல, தனி மனித பிரயத்தனங்கள் இந்த சமூகச் சாக்கடையில பன்னீரைத் தெளித்தது மாதிரி. எந்த முடிவு வேணு முன்னாலும் எடு ஆனால் பாவம். அவனுக்கு முடிவு கட்டுறதாய் இருக்க வேண்டாம். விஷ் யூ பெஸ்ட்” என்றாள்.

தமிழரசி,ஆவேசம் குறையாமலே வெளியே வந்தாள். வரவேற்பறைக்கு வந்து, அங்குமிங்குமாய் பார்த்தாள். விழியருகே, ஒரு நெருப்புக் குச்சியை வைத்திருந்தால், அது தீப்பிடித்து எரிந்திருக்கும். எரிந்த கண்களோடு, எல்லா இடங்களையும் பார்த்தாள். ஆனால் –

தாமோதரனைக் காணவில்லை.


26


நேர்மையானவர் என்று ஒருவரை நாம் நம்பும் போது அவர் சாதாரணமாகப் பேசும் பேச்சுக்கூட தர்மத்தின் உரைபோல தோன்றும். அதே போல், அயோக்கியன் என்று நாம் நம்பும் ஒருவர், தரும நெறிகளைப் பற்றிப் பேசினால் நமக்கு அந்த தர்மத்தின் மீதே அதர்மமான கோபம் வரும். நேர்மையானவர்களே, நியாயம் தேடுபவர்களை, சூதுவாதில்லாத சுத்தர்களை ஆட்டுவிக்கும் உளவியல் விதி இது.