பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

நெருப்புத் தடயங்கள்


இதனால் ஆட்கொள்ளப்பட்ட தமிழரசி, கடற்கரையில் தாமோதரன் அழுததை, கை தேர்ந்த அயோக்கியனின் கண் நடிப்பாகக் கருதி, அவன் அடிக்கடி கடைப்பிடிக்கும் மவுனத்தை வஞ்சகமாகக் கருதி, நேற்று அவன் தன்னிடம் வந்ததையே வலை விரிப்பாகக் கருதி, புழுவைத் தேடுவது. போல் அவனைத் தேடிப் பார்த்தாள். கிடைக்கவில்லை.

இதற்குள் விடுதி வாட்ச்மேன் வந்து, அவளிடம் நான்காக மடிக்கப்பட்ட காகிதம் ஒன்றை நீட்டியபடி “இதை அந்த ஆளு ஒங்ககிட்டே கொடுக்கச் சொல்லிட்டு ஓடிட்டாருமா” என்றான்.

தமிழரசி, காகித மடிப்புக்களைக் கலைத்தாள். அதை வரி வரியாய், வார்த்தை வார்த்தையாய் ஒரேயடியாய்: பார்த்து விட்டு, சோபாவில் சாய்ந்தாள். நடுங்கிய கரங்களில் கசங்கிய காகித வரிகள் கண்வழியாய் நெஞ்சுக்குள் போய் நிலையிழந்து தவித்தன.

“தகுதியில்லாத இந்தப் பாவிக்குத் தற்காலிகமாய் கிடைத்த தமிழரசியே!”

உன் முன்னால் நிற்கக்கூட தகுதியில்லாமல் ஓடுகிறேன். உன்னைப் பற்றிய இனிய எண்ணங்களையும், என்னைப் பற்றிய கொடிய நினைவுகளையும் சுமந்தபடியே ஓடுகிறேன். நீ சொன்னதுபோல் நான் மிருகம். மிருகம், மனிதர்கள் மத்தியில் நடமாடலாமா? கூடாது. ஆகையால், கூனிக் குறுகி மிருகமாகவே என்னைப் பாவித்து. மீள்வது தெரியாமல், மீட்பவர் கிடைக்காமல் ஓடுகிறேன்.

நீ காட்டிய கடிதத்தில் குறிப்பிட்டது போல் மாடக் கண்ணு மாமாவை என் அண்ணன் என்று சொல்லப்படுபவனே சாகடித்தான். கலாவதிக்கு சூடு போட்டான். இப்படி நடக்கும் என்றாே, நடத்திக் காட்டுவான் என்றாே நான் நினைக்கவில்லை. என்றாலும், அவன் நடத்திய, கொடுமைகளே மூடி மறைத்த கொடியவன் நான். என்