பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

273

தமையனை போலீசில் ஒப்படைக்க நினைத்தபோது, கடமை முன்னிழுக்க, பாசம் பின்னிழுக்க, நான் பாசத்தை விழுங்காமல், பாசத்தால் விழுங்கப்பட்டேன்.

ஆனல், அதற்குப் பிறகு நான் பட்ட வேதனை – பட்ட என்பது தவறு. அது படும் வேதனை –படப்போகிற வேதனை – ஆயுட்கால சித்ரவதை – உடல் வாதையைவிட கொடிய மனவாதனே – குற்றச்சுமை தாங்கமாட்டாது, சப்-இன்ஸ்பெக்டர் பதவியை ராஜினமா செய்தேன். ஊருக்கு ஓடினேன். கல்யாண வீட்டில், விஷயத்தைக் கேள்விப்பட்டதும், அங்கேயே அண்ணன் என்னை அடித்தான். அவன் மனைவி மானபங்கமாய் பேசினாள். அப்பா வெளியேறச் சொன்னார். வழிகாட்ட வேண்டிய தந்தையே, வீட்டுக்கு வெளியே வழிகாட்டினார். ஒருவரும், தட்டிக் கேட்கவில்லை.

வெளியேறிய நான், நெல்லைக்குப் போய் பெரிய போலீஸ் அதிகாரியிடம் நடந்ததைச் சொல்லி, சரணடையத்தான் நினைத்தேன். பழையபடியும் பாசம் என்னைத் தாளிட்டது. ஒன் அண்ணன், ஒனக்கு கல்யாணம் பற்றி கடிதம் எழுதவில்லையானலும், ஒனக்கு ஒன் அண்ணனை வெறுக்க முடியுதா? அதே நிலைதான் என் நிலை.

நடந்ததையெல்லாம், உன்னிடம் சொல்லிட்டு, எங்கோ தலைமறைவாகப் போகத்தான் வந்தேன். நேற்று, அந்த இனிமையை கெடுக்க மனமில்லாமல், இன்று சொல்ல நினைத்தேன். அதற்குள், எவனே ஒரு நியாயவான் முந்திக் கொண்டான். குடும்பத்தின் கொடுமைகளுக்கு உடன்பட்டு, ஊருக்குப் பகையாகி, நீ கொண்ட காதலுக்கும் துரோகியாகி, இனந் தெரியா திசைக்குள் போகிறேன். நீ இதுவரை, நல்லதுக்காக எப்படி அல்லதைச் சாடினாயோ அப்படியே இறுதிவரை சாட வேண்டும். நான் எங்கிருந்தாலும், நீதான் என்:நினைவு.

18