பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

நெருப்புத் தடயங்கள்

அந்தத் தகுதியில் நான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடுவேன். இதை ஒப்புதல் வாக்கு மூலமாகவும், நீ போலீசில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எங்கேயாவது, வடநாட்டில் ஒரு அனாதைப் பிணம் கிடந்ததாகச் செய்தி வந்தால், அது ஒரு வேளை நானாக இருக்கலாம். அப்போது நீ அழக்கூட வேண்டாம். அயோக்கியனாய்ப் போன ஒருவன் மீண்டும் யோக்கியனாவதற்கு, அவனுக்குத் தெரிந்த ஒரே வழி இதுதான் என்று நீ, இரு சொட்டுக் கண்ணீர் விட்டால், அதுவே எனக்கு பால் வார்ப்பு; அதுவே ஈமக்கடன்.

உன் காதல் பூஜையில் வைக்க முடியாத தாழம்பூ நான். தாழம்பூ பொய்ச் சாட்சி சொன்னதாய் புராணம் சொல்கிறது. ஆனல் நானே, சாட்சிகளையே பொய்யாக்கி விட்டேன். என்.. தங்க நிலாவே! என்னை மன்னிச் சுடும்மா. தாயே, என்னை மன்னிச்சுடும்மா.

போகிறேன். உன்னே... மன்னிக்கவும்... உங்களை ஒருமையில் அழைக்கும் யோக்கியதை எனக்கேது?

இருந்த அன்பை எங்கேயோ விட்ட, தாமு.”

தமிழரசி, தாமுவின் கடிதத்தையும் அத்துடன் அவன் இணைத்திருந்த மொட்டைக் கடிதத்தையும், கைக் கொன்றாய் வைத்தபடி சுவரில் தலை சாய்ந்தாள். இதற்குள் பத்மாவும் குளித்து முடித்துவிட்டு, கோதி முடிந்த முடியோடு வந்தாள். தமிழரசியின் கோலத்தைப் பார்த்து, அவள் நிலைமையை யூகித்துக் கொண்டாள்.

அவள் கையில் இருந்த கடிதத்தை, பலவந்தமாகப் பிடுங்கிப் படித்தாள். படித்து முடித்துவிட்டு, தமிழரசியின் அருகே அமர்ந்து அவள் தோளில் தட்டினைள். “பாவம், இந்த தாமோதரனும் என்னசெய்வார்? அவரோட கதையும் ஒன் சித்தப்பா, தங்கை கதை மாதிரிதான் முடியும்போலத் தோணுது. பூவர் மேன். தற்கொலை