பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

275

பண்ணிக்கப் படாது,” என்று சொன்னபடியே தமிழரசிக்கு ஆறுதல் அளிக்க வழிதெரியாது விழியாட்டினாள்.

தமிழரசி நிமிர்ந்து உட்கார்ந்தாள். தாமு, ஒருவேளை தற்கொலை பண்ணிக்குவாரோ? இனிமேல் அவரைப் பார்க்க முடியாதோ? என்னாலயே இந்த வினைதீர்த்தான் - பொன்மணி திருமணத்தைச் சொல்ல முடியல. என்னால கூட சித்தப்பா உயிருக்கு விலை வாங்கிய தந்தை மீது நடவடிக்கை எடுக்கணும் என்று தோணல. அப்படித்தானே அவருக்கும் இருந்திருக்கும். நானே அவரை துரத்திட்டேனே. என் மன்னவனை நானே ஆண்டியாய் அனுப்பிட்டேனே. தாமு... தாமு... எங்கே போனீங்க தாமு?

அருகே வந்த வாட்ச்மேனிடம், அவள் குலைநடுங்கக் கேட்டாள் :

“அவரு எந்தப் பக்கமாய் போனாரு?”

“நான் சரியாய் கவனிக்கலம்மா...”

“அவரு போய் எவ்வளவு நேரம் இருக்கும்?”

“பத்து நிமிஷத்திற்கு மேலவே இருக்கும்.”

தமிழரசி எழுந்தாள். பத்மாவும் எழுந்து, “எங்கே போறே” என்றாள். தமிழரசியால் பேச முடியவில்லை. பேதலித்து நின்றாள். பிறகு, “தாமு இந்தப்பக்கம் எங்கேயாவது தென்படுறாரான்னு பார்த்துட்டு வாறேன்” என்று சொல்லிவிட்டு, பத்மாவின் பதிலுக்குக் காத்திராமல், விடுதியின் வாசலுக்கு வந்தாள். அந்தச் சமயம் பார்த்து வந்த ஆட்டோ ரிக்‌ஷாவில் ஏறிக் கொண்டாள். மேற்குப் பக்கமாக வண்டியை விடச் சொன்னாள். ஒரு கிலோ மீட்டர் தூரம்வரைக்கும், கண்களை அங்குமிங்குமாகச் சுழற்றினாள், பிற்கு டிரைவரிடம், ஆட்டோவை கிழக்குப் பக்கமாக விடச் சொன்னாள். டிரைவர், அவளை ஒரு மாதிரி பார்த்தபோது, தமிழரசி கையெடுத்துக் கும்பிட்டு, கண்ணீரும், கம்பலையுமாய் மன்றாடினாள்.