பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

277

கொண்ட ஒரு சிலரைப் பார்த்து சந்தோஷமாய் முன்னேறி சலிப்போடு பின்னேறினாள். ரயில்வே பிளாட்பாரங்களில் டில்லி ரயிலை, பம்பாய் மெயிலை, கல்கத்தா வண்டியை பெட்டி பெட்டியாக சல்லடை போட்டாள். ஒவ்வொரு முகத்தையும் உற்று உற்றுப் பார்த்தாள். ஓடிப் பார்த்தாள். தேடிப் பார்த்தாள். இறுதியில் ஓய்ந்து போனாள்.

ஆட்டோவிடம் மீண்டும் வந்தவள், எங்கேபோவது என்று தெரியாமல் விழித்தாள். டிரைவர் “இம்மா பெரிய சிட்டில எப்படிம்மா கண்டுபிடிக்க முடியும்? இனிமேல் அவராய் வந்தால்தான் உண்டு” என்று சொல்லி விட்டு, அவளையே பரிதாபமாய் பார்த்தான். அவளோ எதுவும் சொல்லாமல், இருக்கையில் விழுந்தாள். ஆட்டோ அவள் மனம்போல் அலறியது. உடல் போல் ஆடியது.

அவள் விடுதிக்குத் திரும்பும்போது நண்பகல்; டிரைவரை அங்கேயே இருக்கும்படி சைகை செய்துவிட்டு, அறைக்குள் வந்தாள். அவளுக்காகவே கல்லூரிக்கு விடுப்புப் போட்டுவிட்டுக் காத்திருந்த பத்மா, பதறி எழுந்தாள்.

“எங்கேடி போனே? சொல்லியிருந்தால் நானும் வந்திருப்பேனே.”

“அப்புறமாய் சொல்றேன். ஆட்டோ வெளில நிக்குது. என் பெட்டில பணம் இருக்கு. ஆட்டோவை அனுப்பிட்டு வா. இந்த இடத்தை விட்டு என்னல நகர முடியாது.”

பத்மா பணத்தோடு போனாள். தமிழரசி, கட்டிலில் சாய்ந்தாள். தாமுவின் கடிதத்தை மேலும் கீழுமாய் பார்த்தாள். முகத்தோடு சேர்த்து அணைத்தாள். பய பக்தியோடு பார்த்தாள். பதற்றத்தோடு மடித்தாள்.

பத்மா திரும்பி வந்ததும், தமிழரசி, குலுங்கிக் குலுங்கி அழுதாள்.