பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

நெருப்புத் தடயங்கள்


“விரட்டிட்டேனே...என் தாமுவை நானே விரட்டிட்டேனே...எவ்வளவு கஷ்டத்தோடு வந்தாரோ? எவ்வளவு ஆசையோடு வந்தாரோ? ஆறுதலுக்காக வந்த மனிதரை அவமானமாய் பேசி அனுப்பிட்டேனே! தாமு... தாமு .. என்னை மன்னிச்சிடுங்க தாமு. நீங்க பதவியைத்தான் பறி கொடுத்தீங்க, நான்... ஒங்களையே பறிகொடுத்துட்டேனே. பாவி நான்! சண்டாளி நான்... நான்... இனிமேல் உலகத்துல இருக்கப்படாது. நீங்க இந்நேரம் எங்கே இருக்கீங்களோ? எப்டி தவிக்கீங்களோ? என்னைப் பற்றி என்ன நினைக்கீங்களோ? தாமு! என் தாமு...”

தமிழரசி, என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் அவளை அவள் போக்கில் விட்ட பத்மா, இறுதியில், அவளுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்யத் தீர்மானித்து தமிழரசியின் முன்னால் போய் நின்று அவளைச் சாடினாள்.

“என்னடி இது? உலகத்துல நீ ஒருத்திதான் கஷ்டப்படுறது மாதிரி அங்கலாய்க்கிறே. ஒன்னை என்னமோன்னு நினைச்சேன், கடைசில நீ இவ்வளவுதானா? நேற்று இலங்கை இனப்படுகொலையை கண்டிச்சுப் பேச ஒனக்கு என்னடி தகுதியிருக்கு? கொழும்புல தீயில எரிந்த தமிழ்க் குழந்தைகளை நினைச்சுப் பாருடி கர்ப்பிணிப் பெண்களோட வயிறுகளைக் கிழித்த பேடித்தனக் கொடுமைகளைக் கற்பனை செய்து பார். ‘இங்கே தமிழர் மாமிசம் கிடைக்கும்’ என்று அங்கே போர்டு போட்ட அரக்கத்தனத்தை எண்ணிப் பாருடி.

அவ்வளவு ஏன்? நம் காலேஜில படிக்கிற அந்த இலங்கை மாணவி என்னமா புலம்பினாள்? அவளோட குடும்பத்தின் நிலைமையைக் கண்டு பிடிச்சுக் கொடுக்கிறதாய் வாக்குக் கொடுத்தே. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாய் அலட்டிக்கிட்டே. சொந்தத் துன்பத்தைத் தாங்கிக்க முடியாதவங்களுக்கு,