பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

279

பிறத்தியார் துன்பத்தைத் தீர்க்கிற யோக்கியதை கிடையாது. இவங்களோட துன்பங்களைவிட ஒன் துன்பம் பெரிசாடி? இப்போ கலாவதி எந்தத் தெருவுல பைத்தியமாய் சுத்துறாளோ? அவளைவிட இந்த தாமு ஒனக்குப் பெரிசாப் போயிட்டான் என்ன? ஊருக்கு உபதேசம் ஒனக்கில்லை என்கிறது உண்மைதான்.”

தமிழரசி, எழுந்து உட்கார்ந்தாள். பத்மாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றிற்கும் ஏற்றபடி உடம்பை அசைத்தாள். பத்மாவை, கூச்சத்தோடு பார்த்தாள். அவள் இப்போது குரலை இறக்கி, கோபத்தைக் குறைத்து, அனுதாபத்தைக் கூட்டிப் பேசினாள்

“கஸ்தூரிபாய் இறந்ததுனால, காந்தி போராட்டத்தை நிறுத்தல. கமலாநேரு இறந்ததாலே, நேரு செயல்படாமல் இருக்கல. வறுமை வாட்டியபோதும் கார்ல் மார்க்ஸ் ஏழை மக்களின் ஆயுதத்தை கூர்மைப்படுத்தாமல் இருக்கல. இந்த சமூக அமைப்புல, நியாயம் கேட்கத் துவங்குறது புலிமேல் ஏறி சவாரி செய்யுறது மாதிரி. பாதில இறங்கினால், பாதிக் கிணறு தாண்டின கதை தான்.

இப்போ ஒருத்தனுக்காக ஓய்ஞ்சு போறது சுயநலம். அதையும் மீறி செயல்படுவதுதான் மனிதாபிமானம். ஒன்னோட துயரம் எனக்குத் தெரியாமல் இல்ல. அதே சமயம் தாமுவோட வாழ முடியாட்டாலும், நாம் மனித குலத்தோடத்தான் வாழ்றோமுன்னு நினைச்சுப்பாரு. பெரிசாய் முடங்கி, சிறிசாய் போயிடப்படாது. கண் முன்னாலயே சிங்களவர் கையில் கணவனோட தலையைப் பார்த்த இலங்கை தமிழ்த் தாய் ஒருத்தியின் நிலைமையை விடவா ஒன் நிலைமை துயரமானது?

ஒனக்கு எவ்வளவோ வேலை காத்திருக்கது தெரியுமா. ஊருக்குப் போய் கலாவதிக்கு ஒரு ஏற்பாடு செய்யணும்.