பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

நெருப்புத் தடயங்கள்

நம்மோட இலங்கை மாணவிக்கு ஒரு வழி செய்யணும். ஒருத்தரோட வாழ்க்கையில் துயரங்கள், அரைப்புள்ளிகளாய் இருக்கணும். முற்றுப்புள்ளியாய் ஆயிடப்படாது. தாமோதரனோ, இன்னும் மூளை குழம்பாத ஆண் மகன். ஆனால் கலாவதி? இதுக்கு மேலேயும் நீ புலம்பிக்கொண்டிருந்தால், கலாவதியையும், அவளை மாதிரி அபலைகளையும் நீ இழிவு செய்ததாய் ஆகிடும். அப்புறம் ஒன் இஷ்டம்.”

பத்மா, தமிழரசியைப் பார்க்காமல், பேச்சில் லயித்தாள். அவளே இப்போது தன்னுள் ஒளிந்து கிடந்த சக்தியின் ஒளிப் பிரணாயாமத்தை அறிந்தவள் போல் வீரியமானாள்.

தமிழரசியின் வெளுத்த கண்கள் சிவக்கத் துவங்கின. உறைந்த நெஞ்சம் கொதிக்கப்போனது. கண்களில் நிறைந்த நீராலேயே முகத்தைக் கழுவிக் கொண்டாள். அதை முந்தானையாலும் துடைத்துக் கொண்டாள். பதற்றமற்ற குரலில் - பற்றறுத்த தோரணையில் முகம் இறுக, இடுப்புச் சேலையை இறுக்கிக் கொண்டே பதிலளித்தாள்.

“தப்பு என்மேலதான் பத்மா! மனிதர்கள், குழந்தைத் தனமாய் இருக்கலாம். ஆனால் சிறு பிள்ளைத்தனமாய் இருக்கப்படாது. நாளனோ, இரண்டாவதில் சிக்கிய-ரெண்டாந்தரப் பெண்ணாய் மாறிட்டேன். நல்ல வேளையாய் நீ என்னை மீட்டிட்டே. இனிமேல் நான் ஒரேயடியாய் செத்தாலும் சாவேனே தவிர, செத்துச் செத்துப் பிழைக்க மாட்டேன். குட்டையை கடலாக நினைத்து மூழ்கிய நான், இனிமேல் கடலையே குளம்போல் கலக்கப் போறேன். அந்த சக்தியை ஊட்டிய ஒனக்கு நன்றி. புறப்படுடி, ஒரு இடத்துக்குப் போகலாம்.”