பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


27

யற்கை, கலாவதிக்கு சிதறிப்போன மூளையை ஒன்றாகச் சேர்க்கவில்லையானாலும், அவள் மொட்டைத் தலையில் முடி விதைகளை வளர வைத்திருந்தது. கூர்மையான முட்கம்பிகள் மாதிரி, தலையெங்கும் குந்தகப்பட்ட கூந்தலை, இடது கையால் குட்டிக் கொண்டோ, தட்டிக் கொண்டோ வலது கையால், ‘கும்பாவிற்குள்’ கிடந்த சோளக் கஞ்சியையும், அகத்திக் கீரையையும் துழாவிக் கொண்டிருந்தாள். முடிபட்ட கரத்தை, முள் பட்டவள் போல் எடுத்தபடியே, ‘எய்யோ... எய்யோ...’ என்று கவளத்திற்குக் கவளம் சொன்னபடியே வாயில் கஞ்சியை போட்டுக் கொண்டிருந்தாள்.

திடீரென்று, மனிதக் கதவுகளாய் வாசலை மறைத்த கூட்டத்தைப் பார்த்து மருண்டாள். ‘எய்யோ...’ என்று கூவிக கொண்டே நார்க் கட்டிலுக்குக் கீழே, தவழ்ந்து தவழ்ந்து பதுங்கப் போனாள். பயந்தோடு பார்த்தவள் கண்களில், பழகிய முகங்கள் தென்பட்டன. விழிகள் பரபரக்க முட்டிகளில் காலூன்றி, எழுந்தாள்.

வெளியே பலத்த கூட்டம், ஆண், பெண் அத்தனை பேரும், வாசலுக்குள்ளும், வாசலுக்கு அப்பால் உள்ள முற்றப் பகுதியையும் வியாபித்திருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் வாசலின் இருபுறக் கதவுகள் போல் நின்ற தமிழரசியும், வினைதீர்த்தானும் கலாவதி மேல் அப்படியே சாயப் போனார்கள். சுருள் சுருளாய் முடியோடு, வட்ட முகத்தோடு, வகிடெடுத்த கூந்தலோடு, புதுப்பானைப் பொங்கல் போல், மங்கலமாய் தோன்றிய கலாவதிக்குப் பதிலாய், மொட்டைத் தலையோடு, தலையிலும், உடம்பிலும், திட்டுத் திட்டாய், பொசுக்கலாய், வெந்த தோலாய், கறுப்புத் துளைகளாய், சிவப்புக் காயங்களாய்