பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

நெருப்புத் தடயங்கள்

சிந்தையிலும் சூடுபட்டு நின்ற கலாவதி, அங்கே இருந்ததால்தான், அவளே இவள் என்று நம்புவது போல் நம்ப முடியாமல் பார்த்தார்கள். பொன்மணி கணவனுக்கும், அண்ணிக்கும் இடையே அல்லாடிக் கொண்டிருந்தாள்.

கலாவதி, தன்னை நோக்கி வந்த அண்ணனுக்கு தோள் கொடுக்காமல், லாவகமாய் ஒதுங்கி தமிழரசியை, மலங்க மலங்கப் பார்த்தாள். ‘எய்யோ... எய்யோ...’ என்று, முன்னிலும் பலமாய் கத்தியபடியே தனது தந்தை மாடக் கண்ணு படுக்கும் காலியான நார்க் கட்டிலையும், தமிழரசியையும் மாறி மாறிப் பார்த்தாள். நம்ப முடியாமல், நகர முடியாமல், பார்க்க முடியாமல், பகர முடியாமல் கண் தீரப் போவது போல் கலாவதியையே பார்த்தபடி நின்ற தமிழரசி, அவளை ராட்சதத்தனமாய் தன்னிடம் இழுத்து, மார்போடு சாய்த்து, அவளின் சூடுபட்ட தலையிலேயே தனது வெம்பிக் கொதித்த தலையை மாறி, மாறி மோதினாள், கலாவதியும், அவள் கழுத்தைச் சுற்றி கரங்களைக் கோர்த்துக் கொண்டு ‘எய்யோ... எய்யோ...’ என்றாள். மீண்டும், அய்யா படுத்த கட்டிலைக் காட்டுவதற்காக தமிழரசியின் மார்பில் இருந்து மீளப்போனாள்.

தமிழரசியே, கலாவதியையும் சேர்த்துப் பிடித்தபடி சுவரருகே பாய்ந்தாள். தலையை சுவரில் மாறி மாறி மோதினாள். “கலா...அய்யோ...கலா...” என்ற வார்த்தைகளல்லாது அவளால் வேறு வார்த்தை பேச இயலவில்லை. யாரோ அவள் தலையைப் பிடித்தார்கள். உடனே, வீடு கொள்ளாச் சத்தத்துடன் தாங்க முடியா வேகத்தோடு, கரங்களால் முகத்தில் மாறி மாறி அடித்துக் கொண்டாள்.

இதற்குள், பொன்மணி பிடிதாரம் இல்லாமலே தரையில் விழுந்தாள். விழுந்தவள் எழாமல் வினைதீர்த்தானின் காலை கட்டிக் கொண்டு எல்லாம் என்னால வந்தது. என்னாலதான் வந்தது. ஒங்க குடும்பத்தையே கருவறுத்த பாவியோட தங்கச்சி நான். என்னைக்