பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

283

கொன்னுடும். இப்படி வருமுன்னு தெரிஞ்சிருந்தால், நான் அப்பவே விஷத்த சாப்பிட்டு இறந்திருப்பேன். நானே எல்லாருக்கும் விஷமாயிட்டேனே...” என்று அரற்றினாள். பிறகு கண்ணீரும் கம்பலையுமாய் கணவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் நின்ற நிலையையும், பார்த்த பார்வையையும் பார்த்தபடியே அவள் கத்தினாள்.

“ஒமக்கு என்ன வந்தது? அய்யோ அவரைப் பாருங்க. தமிழண்ணி. ஒங்க அண்ணனைப் பாருங்க. என்னமோ ஆகப் போகுது. எனக்கு பயமாய் இருக்கே. அய்யோ, அவரைப் பாருங்க.”

எல்லோரும் வினைதீர்த்தானையே பார்க்கத் துவங்கினார்கள்.அவனே, திறந்த வாய் திறந்தபடி இருக்க, விழித்த கண் வெறித்தபடி விழிக்க, நின்றபடியே செத்தவன்போல் அசைவற்று நின்றான். பொன்மணியின் ஒப்பாரி, கூட்ட அமளியையும் ஊடுருவிக் கொண்டிருந்தது. வெளியே இருந்து நெருக்கியடித்த கூட்டமும், வினைதீர்த்தானே மொய்த்தது; அவனோ அத்தனை பேரும் பார்ப்பது தெரியாமல் அய்யாவின் வெறுமைக் கட்டிலைப் பார்ப்பது போலிருந்தது. உள்ளுற தன்னைத்தானே பார்ப்பது போலவும் இருந்தது. கூட்டப் பிரளயத்தில் தானாய். மிதந்து வந்த முத்துமாரிப்பாட்டி, எப்படியோ வினைதீர்த்தானின் அருகே போய் “எய்யா... ஏய் ராசா” என்று அவன் கையைப் பிடித்தாள். அந்தக் கை, சுரணையற்றே கிடந்தது.

பொன்மணியின் ஒப்பாரியோ அல்லது கூட்டம் நெருக்கியடித்ததற்கான காரணமோ புரியாமல், நரகலோகத்தில் கலாவதியோடு கூட்டு சேர்ந்து உலவிய தமிழரசி, அங்கிருந்து விடுபட முடியாமல் தத்தளித்தாள். பிறகு எப்படியோ கூட்டத்தின் கூப்பாட்டில் சுயநினைவுக்கு வந்து கூட்டத்தைப் பார்த்தாள். கூட்டம், கூட்டாகப் பார்த்த வினைதீர்த்தானைப் பார்த்தாள்.