பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

நெருப்புத் தடயங்கள்


தமிழரசிக்கு பிரக்ஞை வந்தது. தன்னோடு தானாய், மார்பில் கவசம்போல், கட்டிப்பிடித்த கலாவதியின் மோவாயை நிமிர்த்தி, “கலா... அதோ... நம் அண்ணன் நிற்கான் பாரு! ஒன்னோட நிலைமையைப் பார்த்துட்டு அவன் எந்த நிலையில நிற்கான்னு இதோ பாருடி பாவிப் பொண்ணே!” என்று சொல்லியபடியே, அவளை, வினைதீர்த்தான் மேல் தள்ளி விட்டாள். அண்ணனையே ஏறிட்டுப் பார்த்த கலாவதி, அவனைப்போல் அசைவற்று நின்றாள். பிறகு, அவன் கழுத்தில் கை போட்டு, அவனைச் சுற்றி வளைத்துக் கொண்டாள். அவன் கழுத்தில் உதடுகளை அழுத்தி “எய்யோ...எய்யோ” என்றவள், “எண்ணோ ... எண்ணோ...” என்று கூவியபடியே, அவன் மார்பில் புரண்டாள்...எல்லோரும் பேச்சற்று நின்றபோது

கலாவதி ஆட்டுவித்ததால், வினைதீர்த்தானின் உடலாடியது. தானாய் ஆடியது. பிறகு, ஒவ்வொரு அவயமும், துண்டித்து விழப்போவது போல் துடித்தன. படபடப்பாய் ஆடின. பம்பரமாய்ச் சுழன்றன. பின்னர் கரிசல் காடாய் தோன்றிய அவன் கண்கள், ரத்தத்தையே நீராக மாற்றி ‘விஷவாதம்’ செய்வது போல், சுழன்றன. சொட்டுச்சொட்டாய்கண்ணீர், கலாவதியின் மொட்டைத் தலையில் தெறித்தது. ஒரு நிமிட கண்ணீர் வெள்ளம், உறைந்து போன அவன் உள்ளத்தைக் கரைத்ததோ என்னமோ, வினைதீர்த்தான் ஊரே அதிரும்படி கத்தினான். அவன் போட்ட சத்தத்தில், சில பெண்களின் இடுப்புகளில் இருந்த குழந்தைகள் பயந்துபோய், தாய்மார்களே அழுத்திப் பிடித்து, அவர்களின் தலைகளில் சாய்ந்து கொண்டன. கலாவதியை சாறாய்ப் பிழிவதுபோல் பிடித்து, அவளையும், தன்னையும் இல்லாமல் செய்யப் போகிறவன்போல், வினைதீர்த்தான், அங்குமிங்குமாய் புரண்டான். அவர்கள் இருவரையும், வைத்த கண் வைத்தபடி, பேச வாயில்லைசிந்திக்க மனமில்லை என்பதுபோல் பார்த்த தமிழரசி,