பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

நெருப்புத் தடயங்கள்

செல்ல மகளே பாருமய்யா. பாவிப்பயலுவ என்ன பாடு படுத்திருக்காங்கன்னு பாருமய்யா.”

தமிழரசி, வினைதீர்த்தானைத் தூக்கி நிறுத்தின்னாள். அவனே, தந்தையின் சமாதியில் இருந்து மண் துகள்களை எடுத்து தனது நெற்றியில் பூசிக்கொண்டான். தமிழரசிக்கும் பூசிவிட்டான். உடனே எல்லோரும் அவனைப் போலவே பூசிக்கொண்டார்கள். கில்லாடியாரின் அதட்டலில், தமிழரசியின் பார்வையில், கூட்டம் ஒழுங்குபட்டு சாலைக்கு வந்தது. “எய்யோ... எய்யோ...” என்று புலம்பிய கலாவதியை, வினைதீர்த்தான், தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு, அவளின் சுமை தெரியாமலே நடந்தான். முன்பின் நினைக்காமல் புறப்பட்ட ஒரு சில தாய்மார்கள் திரும்பிப் போனார்கள். ஆனால் கூட்டத்தின் எண்ணிக்கை முந்நூறுக்குக் குறையவில்லை.

மரம் வெட்டுபவர்கள், கிணறு தோண்டுபவர்கள், விவசாயக்கூலிகள் உட்பட ஏழை எளியவர்கள் நடந்த கூட்டத்தில், ஒதுங்கியிருந்த சேரிமக்களில் பலரும் சேர்ந்து கொண்டார்கள். வாலிபப் பையன்கள், வயதுப் பெண்கள், விடலைப்பயல்கள், முதியவர்கள் என்று சமூகத்தின் எல்லா வயதுகளுக்கும் பிரதிநிதித்துவம் காட்டும் கூட்டம் நிராயுத பாணியாய்த் தோன்றினாலும், போர்ப்பரணிப் பார்வை யோடு போய்க் கொண்டிருந்தது.

‘போலீஸ்காரர்களையும், பணக்காரர்களையும் எதிர்க்க முடியும் போலுக்கே’ என்று பலர் வியந்து கொண்டார்கள். “எட்டி நடங்க” என்ற உசுப்பல்கள் “மெள்ள நடங்கடா முட்டாப்பய மவனுவளா, இந்தக் கிழவியால எப்டி நடக்க முடியுமுன்னு நினேச்சுப் பார்த்தியளா?” என்று கூட்டத்தை தன்னைப்பற்றி நினைக்க வைத்த முத்துமாரிப்பாட்டியின் செல்லச் சிணுங்கல்கள்.

கூட்டம், கூட்டணியாய், இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்குப் போய்விட்டது. காவல் நிலையம் கண்ணில் பட்டது. தமிழரசி அந்தக் கட்டிடத்தை எரிக்கப் போவது