பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

291

போல் பார்த்தாள். திடீரென்று காக்கிச் சட்டைக்காரர் ஒருவரை அவள் பார்த்தாள். உடனே அவளுக்குத் தாமோதரனின் நினைவு வந்தது. ‘பதவியையே தூசாக நினைத்தவர்... இப்போ எங்கே இருக்காரோ? என்ன பாடு படுறாரோ? தாமு... என் தாமு... இதோ இந்த விதி நொந்த எளியவர்களுக்கு இடையே நடக்கும்போதும், உங்களை என்னால் மறக்க முடியலியே, ஒங்களை இனிமேல் பார்ப்பேனா? பார்க்கக்கூட வேண்டாம்; ஒங்களை நல்ல படியாய் பார்த்ததாய் யாரோ சொல்லி, நான் எவளோ மாதிரியாவது கேட்க முடியுமா? தாமு, என்னோட தாமு, நீங்களா சமூகமா என்று வரும்போது, நான் சமூகத்தின் பக்கம். நீங்களா நானா என்றால் எனக்கு நான் பெரிசில்ல; நீங்களே! ஒங்க பக்கமே! இப்போ எந்தப் பக்கமும் பார்க்க முடியாமல் போனேனே. தாமு, போயிட்டிங்களே தாமு! பார்க்க முடியாததெல்லாம் அழிந்தவை அல்ல. ஒங்க நினைவு, நான் அழிவது வரைக்கும், அழியாமல் இருக்கும் தாமு... என் தாமு ...’

காவல் நிலையத்தை, அடிவயிற்று நெருப்பாய்ப் பார்த்த தமிழரசி, சிறிது நேரத்தில் நிதானமாக மூச்சு விட்டாள். படுகளத்தில் ஒப்பாரி கூடாது. ஒப்பாரிக்காரர்கள் களத்திற்கு வரக்கூடாது... அவள், தனக்கு த் தானே வெட்கிக் கொண்டாள். கலாவதியை சென்னைக்குக் கையோடு கூட்டிக் கொண்டு போய், தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்கு முன்னால், பெண்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்திருப்பதும், பத்மா, இந்நேரம் அதற்காக இயக்க உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டிருப்பாள் என்பதும் நினவுக்கு வந்தது. மனதில் ஆர்ப்பாட்டம் ஒழியவில்லை யானாலும், அது, மனதிற்குள் கண்டு பிடிக்க முடியாத ஏதோ ஒரு மூலைக்குள் ஒளிந்து கொண்டது. இதயத்தை நிமிர்த்த முடியாமல் போன தமிழரசி, தலையை நிமிர்த்திக் கொண்டாள்.