பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

நெருப்புத் தடயங்கள்


பாத யாத்திரையோ- நியாயப் பசியாத்திரையோ?’ அந்த கிராமத்துக் கூட்டம் நீதி உபாசகர்களாய், தர்ம யாத்ரீகர்களாய் காவல் நிலையம் அருகேயுள்ள சாலை வழியாகக் கடந்தது. கூட்டத்தில், கால்வாசிப்பேர் அந்த நிலையத்தைப் பார்த்துவிட்டு அப்படியே நின்றார்கள். நின்றபடி பார்த்தார்கள். காவல் நிலையத்தின் முன்னால் ஒரு மோட்டார் பைக். அதன் முன்னிருக்கையில் ஒரு கையைப் போட்டபடி, இன்னொரு கையில் சிகரெட் புகைக்க, முத்துலிங்கம், ஆத்திரமாகவோ, அச்சமாகவோ, அலட்சியமாகவோ கூட்டத்தைப் பார்க்கிறார். பைக்கின் பின்னிருக்கையில் ஒரு கையையும், முத்துலிங்கத்தின் தோளில் ஒரு கையையும் போட்டபடி, ஒரு போலீஸ்காரர் நிற்கிறார். நான்கைந்து போலீஸ்காரர்கள் படிக்கட்டுகளில் நின்றபடி கூட்டத்தை ஆச்சரியமாய் பார்க்கிறார்கள். எப்படி பெர்மிஷன் இல்லாமல் ஊர்வலமாய் வரலாம்? அவர்கள் கூட்டத்தை வழிமறிக்கப் புறப்படுகிறார்கள்.

கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டபோது, வினைதீர்த்தானும், முத்துலிங்கத்தைப் பார்த்து விடுகிறான். அவன் உடம்பில் மின்சாரம் பாய்கிறது. எவரும் எதிர்பாராத வகையில் முத்துலிங்கத்தை நோக்கி ஓடினான். “அடே செறுக்கி மவனே! செய்யுறதையும் செய்துட்டு திமிரோடேயா நிக்கே?” என்று கூவியபடி பாய்ந்தான். எதிரே வந்த ஒரு பனையேறித் தொழிலாளியின் கையில், மின்னிய அரிவாளைப் பிடுங்கிக் கொண்டு குதித்தபடி ஓடினான். தோளில் கிடந்த கலாவதியை பாதி வழியில் கீழே இறக்கி விட்டு விட்டு, பாய்ந்து பாய்ந்து ஓடினான்.

அவ்வளவுதான்.

கூட்டம் கலைந்து ஆளுக்கொரு கல்லை யெடுத்தபடியே அவன் பின்னால் ஓடியது. குடைகளைப் பழுது பார்த்தவரின் குடைக் கம்புகளைக் காணவில்லை. சாலையோரம் குவிக்கப்பட்ட கற்களைக் காணவில்லை. சாலையில் மலையாளம் சந்தைக்கு மாடுகளைப் பற்றிக் கொண்டு செல்பவர்களின்