பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

293

சாட்டைக் கம்புகளும், ஒரு வீட்டின் முன்னால் நல்லதுக்கோ கெட்டதுக்கோ போடப்பட்டிருந்த பந்தல் கம்புகளும் கூட்டத்தினரின் கரங்களுக்கு வந்து விட்டன. கண் திறந்து கண் மூடுவதற்குள் கூட்டம் கண் மண் தெரியாமல் ஓடி காவல் நிலையத்தை சுற்றி வளைத்துக் கொண்டது. கையில் இருந்த கல்லாயுதங்களையும், கம்பாயுதங்களையும் நீட்டி நீட்டி, தூக்கித் தூக்கி, ‘ஏய்... ஏய்...’ என்ற குரல்கள். ‘முத்துலிங்கத்தை கைது செய்யாமல்...கொஞ்சுறதா’ என்ற அதட்டல்கள்.

இதை சற்றும் எதிர்பாராத போலீசார், உள்ளே ஓடினார்கள். முத்துலிங்கமும், அவர்களோடு ஒட்டிக் கொண்டு, உள்ளே ஓடினார். வழி மறிக்கப்போன போலீசாரும், பாதி வழியில், திரும்பிப் பார்க்காமலே ஓடி, காவல் நிலையத்திற்குள் ஓடினார்கள். திடீரென்று, காவல் நிலையக் கதவுகள் சாத்தப்படுகின்றன. ஜன்னல்கள் ஒடுக்கப்பட்டு, துப்பாக்கி முனைகள் தெரிகின்றன.

வழியில் இதர பெண்களோடு திகைத்து நின்ற தமிழரசியின் காதில் ‘எப்பதம் வாய்த்திடும் போதும் - அதை யாவர்க்கும் பொதுவில் வைப்போம்” என்று பாரதி கொக்கரிக்கிறான். உடனே அவள் பெண்களை கை காட்டி அழைத்தபடியே, காவல் நிலையம் நோக்கி ஓடுகிறாள். பாதி வழியில் மீளத் தெரியாமல் நின்ற கலாவதியை இழுத்துக் கொண்டே ஓடி கூட்டத்தில் சேர்கிறாள். திடீரென்று பயங்கரமான சத்தம்...

‘டுமீல்...டுமீல்...டுடுடு. டுமீல் டுமீல்!’

எறியப்பட்ட கற்களுக்குப் பதிலாக, இரும்பு புல்லாங் குழல் போல் தோன்றிய, ஜன்னலோர துப்பாக்கி முனைகளின் பேய் வாய் வழியாய், உருண்டை உருண்டையாய், வட்ட வட்டமாய் ஈயப்பொருட்கள், ராக்கெட் வேகத்தில் வெளிப்படுகின்றன. மூன்று பேர், அடியற்றுக் கீழே விழுகிறார்கள். தலையில் சிறு துவாரத்தின் வழியால் ரத்தம் பீறிட, பிடரியில் பெருச்சாளிப் பொந்துபோல் மூளை