பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

நெருப்புத் தடயங்கள்

சிதற, அவர்கள் முனங்கக் கூட நேரமின்றிச் சாய்கிறார்கள். இந்த மூவரின் முதல்வியாய், தலையில் ரத்தம் நீரூற்றாய் மேலோங்க, கலாவதி ‘எய்யோ... எய்...’ என்றபடி மல்லாந்து கிடக்கிறாள். தமிழரசிக்கு எதுவுமே நினைவில்லை. யார் விழுந்தார் என்ற பிரக்ஞை இல்லை. கீழே கிடந்த காலாவதியான கலாவதியின் ஒரு கையைத்தூக்கியபடியே, அவள் கலாவதி என்பதை உணராமலே தூக்கித் தோளில் போட்டபடி அரிவாளை வீசப்போன வினைதீர்த்தானின் ஒரு கையையும் பற்றியபடி செத்தவளுக்கும், இன்னும் சாகாமல் நிற்பவனுக்கும் இடையே அவள் இழுபட்டாள். பிறகு கலாவதியை விட்டுவிட்டு, வினைதீர்த்தானைப் பின்னுக்குத் தள்ளி காவல் நிலையத்தின் முன்னால் துப்பாக்கிக் காலனின் நேரடிப் பார்வையில் மேனியைக் காட்டியபடி அடங்கிப்போக முடியாத - அடக்க முடியாத - ஆவேசியாகிறாள். அவள் கழுத்து துப்பாக்கிபோல் நிற்கிறது. வாய் அக்கினிக்குழம்பை கக்குகிறது.

“சுடுங்கடா! என்னோடு சேர்த்து எத்தனைபேரை வேண்டுமானாலும் சுடுங்கடா! சுட்டுத் தொலைங்கடா! தன் மானத்தை விட்டுக் கொடுத்து, நாங்க சுதந்திரத்தை அனுபவிக்கத் தயாராய் இல்லை. உம்... சுடுங்கடா! காலம் ஒங்களை சுடுமுன்னால எங்களை காலனிடம் அனுப்புங்கடா!”

சிதறிய கூட்டம் மீண்டும் அணிவகுத்து, காவல் நிலையத்தை நெருங்குகிறது. அதோடு வேடிக்கை பார்ப்பது போல் நின்ற கூட்டம் தோள் கொடுக்கிறது. மூட்டை தூக்கிகள், வாடகை வண்டி ஒட்டிகள், சைக்கிள் ரிக்‌ஷாக்காரர்கள் கூட்டத்தை கும்பலாக்குகிறார்கள். குற்றாலத்திற்கு, ஜமாபந்திக்குப் போய்க்கொண்டிருந்த அதிகாரிகளின் கார்கள், காவல் நிலையத்தை நோக்கி நகர்கின்றன.

ஆட்சித் தலைவரும், மாவட்ட காவல்துறைத் தலைவரும் வந்தாலும் வரலாம் என்று அனுமானித்து அவர்களுக்கு துப்பாக்கிகள் சகிதமாய் அணிவகுப்பு வரவேற்புக் கொடுக்கத் தயாராய் இருந்த போலீஸ்காரர்களும்,