பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

நெருப்புத் தடயங்கள்

நிலவும் உறவின் அடிப்படையில், விமர்சன செய்தியாக அனுப்பப்படலாம். அரசியல் பத்திரிகைகள் அதற்கு வர்ணம் பூசலாம். சட்டசபையில், அரசு இதைக் குறைத்துக் காட்டலாம். எதிர்க்கட்சிகளைக் கூட்டிப் பேசலாம். நாளைக்கே, ஆயுதப் போலீசார் குட்டாம்பட்டிக்குள் சென்று, தங்களது தீராத தீரத்தைக் காட்ட ‘பிளாக் மார்ச்’ செய்யலாம். விசாரணைக் கமிஷன் நியமிக்கப்படலாம். வயிறு காய்ந்தவர்கள், கோர்ட் கோர்ட்டாய், வாய்தா வாய்தாவாய் அலையலாம். ஆனாலும்

இந்தச் செய்திக்குள் இருக்கும் சேதி எப்போதும் ஜோதி வடிவாய் சுற்றும். பூசி மழுப்பி பொங்கலிடப்பட்ட விவகாரம், செய்தியாவதற்கு இதுவரை மூன்று உயிர்கள் விலையாயின.

அந்தச் செய்தி மீது நடவடிக்கை எடுக்க எத்தனை உயிர்கள் தேவையோ? தர்ம நடவடிக்கை எடுக்கப்படுமா? ‘தர்மத்திற்கு’ என்று எடுக்கப்படுவதுபோல் எடுக்கப்படுமா...?

காலத்திற்கே வெளிச்சம். காலத்திற்கு வெளிச்சம். இருக்கிறதா?

காலத்திற்கு வெளிச்சம் மட்டுமல்ல, கஷ்டப்படுத்தியவர்களே கஷ்டப்படுத்தும் சக்தியும் உண்டு என்று வரலாறு கூறுகிறது. ஒரு தடவை சொன்னால், முரட்டு மூடர்களுக்குப் புரியாது என்று, பல தடவை, பல நாடுகளில் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறது.