பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

நெருப்புத் தடயங்கள்

மணியையும் ஓரக்கண்ணால் பார்த்தபடி, ‘கண்டுக்காமல்’ வெளியே வந்தாள். பகவதியம்மா, மகளை வற்புறுத்தவில்லை. மகளின் பிடிவாதத்தை, மறுவாதத்தால் மாற்ற முடியாது என்பது, தாய்க்குத் தெரிந்ததுதான்.

தமிழரசி, தெருவழியாக நடந்து கொண்டிருந்தாள். தெருவின் இருபுறமும் திண்ணைகளில் உட்கார்ந்திருந்த ஏழை பாழைகள், அவளைப் பார்த்ததும், தங்களை நோக்கித் தான் அவள் நடந்தாலும், இவர்களே அவளைப் பார்த்து நடந்தார்கள். தமிழரசி அவசரமாக நடந்து பார்த்தும் அவளால் முடியவில்லை. ஒவ்வொருவரும் அன்பு கனியப் பேசும்போது, இன்னும் கனியா-காயா என்று தெரியாத அந்த அன்பிற்காக, இந்த கனிந்த அன்பை அவளால் மீற முடியவில்லை. அப்படியும் “நாளைக்கு சாவகாசமாகப் பேசலாம்” என்று சிலரிடம் சொல்லிப் பார்த்தாள். அந்த சிலரில் ஒரு சிலரோ “நாளைக்கு நாங்க எந்த ஊர்ல, எந்த வயக்காட்டில் நிக்கிறோமோ?” என்று சொன்னபோது, அன்பைத் தவிர, வேறு எதையும் கேளாத அந்த மக்களிடம் இருந்து, எடுத்த எடுப்பிலேயே அவளால் விடை பெற முடியவில்லை. காதலே காயப்படுத்தியபடியே, அவள் காது விட்டு கேட்டு, மனம் விட்டுப் பேசினாள்.

எப்படியோ, பேசவேண்டியவர்களிடம் எல்லாம் பேசி, புளியந்தோப்பிற்குள் வந்தபோது, காசியாபிள்ளை கிணற்று மேட்டில், வெள்ளை ஆடையில் ஒரு உருவம் தெரிந்தது. அநேகமாய் தாமோதரனாகத்தான் இருக்கும்!

தமிழரசிக்கு நடக்க நடக்க, கால்கள் வேகமெடுத்தன. அவள் பதினொன்றாவது படிக்கும்போது, இந்த தாமோதரன், பி. ஏ. படித்தான். ஒரு தடவை விடுமுறையில் வந்தபோது, இவன் மட்டும் ஏரிப் பக்கமாக வந்தான். தோழிகளோடு, தமிழரசியும் பின்னால் வந்தாள். மாலை மயங்கிய நேரம். ஏழெட்டுப் பெண்களுக் கிடையில் வந்த தமிழரசி “தாமு...தாமு...” என்றாள்