பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

21

அவனுக்குக் கேட்கும் குரலில். அவன் திரும்பிப் பார்த்த போது, இவள் ‘பால் குடிக்காத’ பூனை போல் வேறு எங்கேயோ பார்ப்பாள். அவன் மீண்டும் நடக்கும்போது “தாமு... தாமு” என்பாள். இப்படி அவன் நிற்க நிற்க நிறுத்தி, போகப் போகப் பேசியவளைப் புரிந்து கொண்டவன் போல், அவன், மறுநாள் நண்பர்களோடு போனபோது “இப்போ, பாரதி சொன்னது மாதிரி, தெருவெங்கும் தமிழோசை கேட்குதுடா” என்றான்.

இப்படிப் பல சின்னச்சின்ன நிகழ்ச்சிகள். தமிழரசி கல்லூரிக்குள் நுழைந்தபோது, அவன் சென்னையில் எம். ஏ. வுக்குப் போய்விட்டான். அதிகமாக ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை. ஆனாலும், அவளால் அவனை மறக்க முடியவில்லை. இன்னும், மனதுள் அந்த ‘இன்ஸ்பெக்டர்’ தாமோதரனுக்குப் பதிலாக, கல்லூரித் தாமுவே நிற்கிறான். தமிழரசியும், பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு, ஊரில் சில காலம் வேலையில்லாமல் இருந்தாள். அப்போது ஊருக்கு வந்த அவனை ஓரிரு தடவை பார்த்திருக்கிறாள். ஆனால் பேசியதில்லை. சென்ற ஆண்டு, உதவிப் பேராசிரியையாக, அவள் விடுப்பில் வந்தபோது, சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரனை ஊரில் பார்த்தாள். ஏரிப்பக்கம் பார்த்துக் கொண்டார்கள்.

அங்கே அப்போது ஆளில்லைதான்! ஆனாலும் இருவரும் ‘நீங்க... நாங்க’ போட்டுப் பேசினார்கள். அவன் கல்லூரி டிஸ்ஸிபிளின் பற்றிக் கேட்டான். இவள் லா அண்ட் ஆர்டர் பற்றிக் கேட்டாள். இருவருமே தங்களை ‘மெச்சூர்’ ஆட்களாகக் காட்டிக் கொண்டதில், காதல், ‘இம்மெச்சூர்ட்’ ஆகியது. ஏதோ ஒரு உதவிப் பேராசிரியை, ஒரு காவல் துறை அதிகாரியிடம் ‘ஜெனரல்’ சமாச்சாரங்களை பேசிய அதிருப்தியோடு அவள் விடைபெற்றாள். அவன் எப்படி நினைத்தானோ?

காதல் வயப்பட்ட ஒருத்தனோ அல்லது ஒருத்தியோ, அந்த ஒருவனை அல்லது ஒருத்தியைப் பார்க்கும்போது,