பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


3

கிணற்றுமேட்டில் நின்ற கோணத் தென்னையில் இருந்து ஒரு ‘குறும்பு’ (துளிர்விடும் தேங்காய்), வரப் போரம் சரிந்து நின்ற வாழைக்குலையில் விழுந்தது. பம்ப்செட் அறையை ஒட்டியிருந்த நிலத்தில் பச்சையாய் கோலங்காட்டி, சிவப்பு சிவப்பாய் முடிந்த செம்பருத்திப் பூக்கள், மாலை வெயிலில் மரகதமாய் மின்னின. உலக்கைக்கு வெள்ளை வர்ணம் தீட்டியது போல் சிந்தாமல் சிதறாமல் பாய்ந்து, பிறகு தளத்தில் பட்டுத் தெறித்த வெண்மை நீர்த்திவலைகள், செம்பருத்திப் பூக்களில் சிந்தி, வானவில்லாய் ஆகாயத்தில் தோன்றும் அதிசய நட்சத்திரங்களாய் மின்னின.

அப்போதுதான் தமிழரசிக்கு, தாமோதரன் மீது தான் கொண்ட அன்பின் முழுமையும் புரிந்தது. அறியாப் பருவத்தில் இருந்தே பாசமாகி, ‘அறியும்’ பருவத்தில் காதலாகி, பற்றாகி, பாசமாகி, பழக்கமில்லா நட்பான ஏதோ ஓர் உணர்வு உடலோடு உருக்கொண்டு, உணர்வோடு உயிர் கொண்ட, அந்த இன்பச் சுமை, இப்போது அவளிடமிருந்து பிரிந்து,தன்னந்தனியாய் நின்று, அவளையும் தனியாக்கித் தவிக்க வைத்தது தாபப்படுத்தியது. கோபப்படுத்தியது. சுமை போனதால், அவளுக்குத் தலை கனத்தது.

தமிழரசி, அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவனோ, குழந்தை பெற்ற தாய்போல பூரிப்போடு நின்றான். தமிழரசி, அந்த இடத்தை விட்டு நகரப் போவதுபோல பாதங்களை நகர்த்திப் பார்த்தாள். அவை முன்னும் பின்னுமாக வம்படித்தன. அவளுக்கும் ஒரு நிறைவு தேடும் தாபம். ‘நான் உன்னைத்தான் காதலிச்சேன். ஆனால் வேறு வழியில்லாமல் இன்னொருத்தியை கட்டும்