பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

நெருப்புத் தடயங்கள்

இதற்குள், தமிழரசியின் சித்தப்பா ‘பைத்தியாரத் தர்மரின்' மகள் கலாவதி, இடது கையில் ஒரு கலசத்துடனும், வலது கையில் பனைஒலை குருத்தோடும் வந்து விட்டாள். குருத்து ஒலைகளை பட்டையாக உருவாக்கி, ஒன்றை தமிழரசியிடமும், இன்னொன்றை தாமோதரனிடமும் கொடுத்து விட்டு “பயினிக்குள்ள நொங்க வெட்டிப் போட்டாச்சு’’ என்று சொன்னபடியே, கலசத்தைத் தூக்கி, லேசாகக் கவிழ்த்து, பட்டையில் பதனீரைக் கொட்டினாள்.

உடனே "பொன்மணிக்கும் ஒரு பட்டை பிடி!" என்று தமிழரசி, கலாவதியிடம் சொல்லி விட்டு, "பொன்மணி! பொன்மணி! ஒன்னைத்தான்" என்று கூப்பிட்டாள். அப்போதுதான் அவளைப் பார்த்த கலாவதி இன்னக்கு இவளுக்கு என்ன வந்துட்டுது. புதுப் பொண்ணு மாதிரி ஏன் 'பவுசு' காட்டுறாள். ஏய் பொண்ணு, வந்து பயினிய ஒரு கை பாருடி" என்றாள்.

பொன்மணியையே பார்த்த தமிழரசி, பின்னர் கலாவதியிடம் "ஒனக்கு விஷயம் தெரியாதா? அவளுக்கு நாகர்கோவிலுல இவரு மாப்பிள்ளை பார்த்துட்டாராம். இனிமேல பொன்மணி, அங்கே போகவேண்டியதுதான் பாக்கியாம். அதனால், இப்போ அவள் மாப்பிள்ள ஊர் திசையைப் பார்த்து நிற்கிறாள். அம்மாவுக்கு வெட்கம் வந்துட்டு. ஏய் பொன்மணி, வாடியம்மா. ஒங்க அக்காவுக்குக் கல்யாணம் நடக்குற நாள்லயே, ஒனக்கும் நடக்குமாம். கவலைப்படாதே. காத்திருக்க வேண்டியதில்ல’’ என்றாள்.

பொன்மணி,அவர்களைப் பார்த்துத் திரும்பப்போனாள். முடியவில்லை. நிச்சயம் கண்கள் நீரில் மிதக்கும். இப்பவே சொல்லிடலாமா? அண்ணாவை அவமானப் படுத்துறது மாதிரி...இங்கேயே எப்டி சொல்றது? என்ன செய்யலாம்? தமிழரசி அண்ணிகிட்ட சொல்லி, அவங்கள அண்ணாகிட்ட