பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

39

இன்னும் வயசு இருபத்தைந்தை தாண்டியிருக்காது. சரி தானா?’ என்றான். தான், அவளைப் பார்க்கும் விதத்தை சரிதானா என்று வினவுகிறானா அல்லது பேசியதை சரிபார்க்கிறானா என்ற இன்பப் புதிர் புரியாமல் தடுமாறிய தமிழரசி, இறுதியில் சிரிப்பு சிந்த பதிலளித்தாள்.

"நீங்கவேற... இவன் முன் கோபத்துக்கு, இவனை போலீஸ்ல சேர்த்திங்கன்னா, அப்புறம் ஒங்களையே அரெஸ்ட் செய்யப் பார்ப்பான்.”

அவர்களின் விமர்சனத்தை காதில் வாங்காமலே, அண்ணாந்த பார்வையை தாழ்த்தாமல், வினைதீர்த்தான், :ஏ. தேவடியா மவன் ... என்னையே ஏமாத்திட்டான் பாருங்க...’’ என்றான்.

பிறகு அவர்களை ஒட்டு மொத்தமாக நோக்கி அந்தத் தென்னையில, நாலு குலை தேங்காய் இருந்துது. முந்தா நாள் தான் முள்ள வச்சுக் கட்டுனேன். எவனே ஒரு பயல் மரத்துல ஏறி, தேங்காய பறிச்ச தோட, முள்ளையும் விறகுக்கு எடுத்துக்கிட்டுப் போயிட்டான்.’’ என்றான்.

தாமோதரன், அவனே கிண்டலாகச் சாடினான்.

"மாப்பிள்ளை வெறும் பிள்ளைதான் போலுக்கு. தேங்காயையே காப்பாத்தத் தெரியாதவரு, பொண்டாட்டியை எப்படிக் காப்பாத்தப்.போறாரோ?”

உடனே தமிழரசி இடைமறித்தாள்.

"ஒங்களால முடியுமோ என்னவோ? இவனால முடியும். அப்புறம் போலீஸ் சார், தேங்காய் பறிக்கிறவனை, எந்த சட்டத்துல சார்ஜ் பண்ணுவீங்க? இருக்கிற தேங்காய் களுக்கு, நீங்க இங்க இருக்கிறவரைக்கும் பாரா போடுங்களேன். கரெக்டா சாயங்காலம் ஆறு மணிக்கு வந்துடுங்க... ஏன்னா, யாரும் பார்க்க மாட்டாங்கன்னு அப்போதான் திருடன் வருவான்" என்றாள்.