பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

II


"நெருப்புத் தடயங்கள்" மூன்று குடும்பங்கள் சம்பந்தப்பட்ட கதை. காதலர் இருவர் உடன்போக்காகச் சென்று விட்டதையும், அதனால் விளைந்த சிக்கல்களையும் கதை சித்திரிக்கிறது. இந்தச் சிக்கலையும் குடும்ப வட்ட அளவினதாக அதன் பரிமாணத்தைக் குறுக்கிவிடாமல், சமுதாயம் தழுவிய மாபெரும் போராட்டமாக சமுத்திரம் உருப்பெருக்கிக் காட்டுகிறார். அதிகார வர்க்கத்திற்கும் அப்பாவியான பொது மக்களுக்கும் இடையே நடக்கும் 'பாரதப் போர்' என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

மனித வாழ்க்கை இடையறாத போராட்டங்களின் சங்கிலிப் பிணைப்பாகவே விளங்குகிறது. இப் போராட்டக் களத்தில் சாதாரண மனிதனே கூட வெறும் பார்வையாளனாக நிற்க முடியவில்லை; பங்கு பெறுவோனாக மாற வேண்டியுள்ளது. இந்த நிலையில் இலக்கியக் கலைஞன் வாளா இருக்க முடியுமா? ஏதோ ஒரு பக்கத்திற்காகக் களத்தில் இறங்கியே ஆதல் வேண்டும். தோழர் சமுத்திரம் இந்த நவீன பாரதப் போரில் யார் பக்கம் நிற்கிறார் என்பதை நான் சொல்லியா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்? அவர் மக்கள் பக்கமே. போராட்டத்தின் இறுதியில் மக்கள் சக்தியே வெற்றி பெறும் என்னும் நம்பிக்கையை ஊட்டும் வகையில் நாவலின் முடிவு அமைந்துள்ளது.

உணர்ச்சி மயமான நாடகக் காட்சிகளைப் படைத்துக் காட்டி, அக் காட்சிகளின் வாயிலாகவே கதையை நகர்த்திச் செல்வது சமுத்திரத்தின் பாணியாக உள்ளது. மனத் தடத்தில் அழுத்தமாகப் பதியும் கதை மாந்தர்கள். அவர்தம் இயல்பான பேச்சு வழக்குகள்-இவை இரண்டும் சமுத்திரத்திற்கு இலக்கிய வெற்றியை ஈட்டித் தரும் கூறுகளாக விளங்குகின்றன. கதையின் மையப் பாத்திரமாகிய தமிழரசி சமூகக் கொடுமைகளோடு போராடும்